Breaking
Mon. Nov 25th, 2024

“நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை…”

“அதனால் கிடைத்துள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்…”

ஜனாதிபதி தெரிவிப்பு….

“புரட்சிகர கட்சிகளெனச் சொல்லிக்கொள்வோர், மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் இலாபம் பெறுவதையே எந்நாளும் செய்தனர்…”

பிரதமர் தெரிவிப்பு…

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, இன்று (26) முற்பகல், எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, சிக்கல்களற்ற காணிகளின் உரித்துரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சிக்கலற்ற ஒரு இலட்சம் காணிகளின் உரித்துரிமையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 35,000 காணி உறுதிப் பத்திரங்கள், 10 வலயங்களைச் சேர்ந்த விவசாய மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், மகாவலி பிரதேசங்களில் வசிக்கும் விவசாய மக்கள் அனைவருக்குமான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காணியின் சட்டபூர்வ உரிமை கிடைப்படதன் மூலம், அந்தக் காணியை குடும்ப உறுப்பினரொருவரின் பெயருக்கு மாற்றம் செய்தல், பாதுகாப்புக் கருதி நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல் போன்ற பல அனுகூலங்களைக் காணி உரிமையாளர் பெறுவார்.

ரண்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால், 30 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையானது, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் கிடைக்கப்பெறும் செலாவணி இழப்பு, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால் ஏற்பட்டவை அல்லவென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

20 வருடங்களாக வாழ்ந்து வந்தும், அந்தக் காணியின் சட்டபூர்வ உரிமையற்றிருக்கும் மகாவலி மக்களுக்கு அந்த உரிமையைப் பெற்றக்கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அரசாங்கம் என்ற வகையில் உணர முடிகின்றது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இரசாயனப் பசளை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்து, புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாய மக்களை வீதிக்கு இறக்கினர். பயிர்ச் செய்த வயல்களுக்கு தீயிட்டுப் பயிர்களை அழித்துச் செய்த போராட்டங்கள் என்பன, விவசாயி மீதுள்ள அன்பால் செய்யப்பட்டவை அல்லவென்றும் இதன்மூலம் அவர்கள் அரசியல் இலாபம் பெறவே முயற்சித்தனர் என்றும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.

காணி உரித்துரிமையை வழங்குவதால் மாத்திரம் மகாவலி விவசாய மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வை எட்டப்போவதில்லை என்று தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள், தேசத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, அனைத்து விவசாயக் காணிகளிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வது விவசாய மக்களின் கடமையென்றும் தெரிவித்தார்.

மகாவலி வலயத்தின் மூன்றாவது தலைமுறையினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்கின்றதென்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மகாவலி வலய விவசாயிகளின் காணிகள் மாத்திரமல்ல, உயிர்களைப் பறிகொடுக்கும் காலத்தை மாற்றியதும் ராஜபக்ஷர்களே என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் அவர்கள், வாவிகள், அணைக்கட்டுகளை நிர்மாணித்து மகாவலிக்கு உயிரூட்டி, இரண்டு போகங்கள் மாத்திரமன்றி மூன்றாவது போகமென மேலதிக போகமொன்றைச் செய்வதற்கான வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
26.02.2022

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *