ஸ்ரீ ஜயவர்தனபுர, அத்துல்கோட்டே மஹிந்தாராம விஹாரையின் இலங்கை நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையப் புலமைப்பரிசில் வழங்கல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 1986ஆம் ஆண்டில் இலங்கை நிப்பொன் கல்வி மற்றும் கலாசார கேந்திர நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜப்பானிய நிதியுதவிப் புலமைப்பரிசில் வழங்கல், ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுத் திட்டம், மருத்துவப் பராமரிப்புச் சேவைகள், விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், ஜப்பானியக் கொடையாளிகளின் அனுசரணையில் நிப்பொன் கேந்திர நிலையத்தினால் நடத்தப்பட்டன.
ஜப்பானிய நன்கொடையாளர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இதுவரையில் 13,680 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புலமைப்பிரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியாதல், நன்கொடையாளர்களாக இருந்த நிலையில் உயிரிழந்த ஜப்பானியர்கள் மற்றும் நிப்பொன் கேந்திர நிலையத்தின் முன்னாள் செயற்பாட்டாளர்களின் நினைவேந்தலும் இதன்போது இடம்பெற்றது.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் தலைமையிலான சங்க சபையினரின் பிரித் பாராயணம் மற்றும் மத அனுஷ்டானங்களுடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வருடத்தில் புலமைப்பரிசில் வழங்குவதற்காக ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதனைக் குறிப்பிடும் வகையில், ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன, ஜனாதிபதி அவர்களினால் கையளிக்கப்பட்டன.
நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மஹா சங்கத்தினருக்கு பிரிக்கர வழங்கிய ஜனாதிபதி அவர்கள், இலங்கை நிப்பொன் கல்வி மற்றும் கலாசார கேந்திர நிலையத்தின் நிறுவனரும் கோட்டே மஹிந்தாராம விஹாராதிபதியுமான வணக்கத்துக்குரிய மீகஹாதென்னே சந்திரசிறி தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதெயாக்கி, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கோட்டே மாநகர சபை மேயர் ஐ.எம்.வி.பிரேமலால் ஆகியோரும் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை நிப்பொன் கல்வி மற்றும் கலாசார கேந்திர நிலையம் மற்றும் விஹாரை நிர்வாகச் சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
20.02.2022