Breaking
Sat. Nov 23rd, 2024

மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம் மாற்றம் வரும். எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் அமைச்சின் காலகட்டத்தில் அட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது.

மகிழ்ச்சி இல்லம் அமைப்பின் நிதி பங்களிப்பில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பழனி திகாம்பரம், சிறப்பு அதிதியாக மயில்வாகனம் உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், முத்தையா ராம், மகிழ்ச்சி இல்லத்தின் முகாமையாளர் பாஸ்டர் பெருமாள் ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக மட்டும் அல்ல, சமூக ரீதியாகவும் நாம் ஒன்றுபடவேண்டும். கடந்த காலங்களில் எமது மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. இதனால்தான் சமூகம் பின்தங்கிய நிலையில் இருந்தது. எனினும், தலைவர் திகாம்பரம் அமைச்சரான பின்னர் மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். தனி வீடுகளை அமைத்துக்கொடுத்தார். நூலகங்கள் அமைக்கப்பட்டன. கலாசசார மண்டபங்கள் நிறுவப்பட்டன. காணி உரிமை கிடைத்தது. எனவே , திகாம்பரம் போன்ற தலைவர்கள் எமக்கு கிடைத்தமை வரமாகும். எனவே, அவர் வழியில் பயணித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் வீட்டுரிமை மற்றும் காணி உரிமையை திகாம்பரமே பெற்றுக்கொடுத்தார். ஆட்சிகள் மாறினாலும் மக்களுக்கான சேவைகள் மாறக்கூடாது. ஆனால் இந்த ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. திகாம்பரம் கட்டிய வீடுகள் குருவிக்கூடு என்றார்கள். இன்று அதைகூட கட்டுவதில்லை. தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஆளுந்தரப்பால் மீறப்பட்டுள்ளன. மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த பிரதேச செயலகங்கள்கூட பறிக்கப்பட்டுள்ளன. உப அலுவலகங்களே திறக்கப்படுகின்றன. கிடைத்த உரிமையையும் இழந்துள்ளனர். இப்படியான தலைமைத்துவம் வேண்டுமா? எனவே, எமது கஷ்ட நஷ்டங்களை புரித்த தலைவர்தான் எமக்கு வேண்டும்.

நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர்தான் சஜித். மலையக மக்களின் இதயத்துடிப்பை தெரிந்தவர்தான் திகாம்பரம். இப்படியான தலைவர்களே நாட்டை ஆள வேண்டும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *