Breaking
Fri. Nov 22nd, 2024

“பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, நாம் அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதையும்,

“சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதைப் போன்றே, பொறுப்புகளும் உள்ளன” என்பதனையும்,

“நமக்கான அந்தப் பொறுப்புகளை மறந்துவிட்டு, எமது உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல” என்பதனையும் இன்று நான் வலியுறுத்தினேன்.

இன்று முற்பகல், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்ற, எமது நாட்டின் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, இதனை நான் வலியுறுத்தினேன்.

நிகழ்வின் தொடக்கத்தில், தேசிய கொடியினை நான் ஏற்றி வைத்த பின்பு – மாணவ, மாணவியர்கள் தேசிய கீதம் பாடினர்.

அதன் பின்னர் – பாதுகாப்புப் படைகளின் பிரதானி, கடற்படை, வான்படைத் தளபதிகள் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோரினால் சிறப்பு மேடைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

தொடர்ந்து, பாடசாலை மாணவிகளால் “ஜயமங்கள கீதம்” மற்றும் “தேவோ வஸ்ஸது காலேன” கீதம் ஆகியன பாடப்பட்டன.

தொடர்ந்து – இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவேந்தும் வகையில் 02 நிமிட அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை அடுத்து, நாட்டின் அரசுத் தலைவருக்காக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தேசத்துக்கான எனது உரையை ஆற்றுகையில் –

“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்க்கணிய அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்பதனை இதன்போது நான் நினைவூட்டினேன்.

“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே கால உசிதமானது. அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்பதனை நான் குறிப்பிட்டேன்.

நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் நான் இன்று கேட்டுக்கொண்டதுடன்,

“நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தை நீங்கள் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றும் நினைவூட்டினேன்.

“வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காக நான் பாதுகாப்பேன்” என்பதை நான் தெரிவித்ததுடன் –

“நாட்டின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக நான் உங்களுக்கு வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பேன்” என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

“சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த – பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக என்னோடு இணையுங்கள்”

என்று, தேசபக்தியுள்ள அனைத்து மக்களுக்கும் நான் இன்று அழைப்பு விடுத்தேன்.

இன்றைய, 74ஆவது சுதந்திர தின நிகழ்வு, கொவிட் தொற்றொழிப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களுடன், நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தரைப்படை, கடற்படை, வான்படை, காவற்துறை, குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவப் படையினர் ஆகியோர் இன்றைய அணிவகுப்பு மரியாதைகளில் ஈடுபட்டிருந்ததோடு –

எமது தாய்த்திருநாட்டின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிய கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அனைத்து மதங்களினதும் தலைவர்கள், இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஐந்தாவது ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சரவை அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், எனதும் மற்றும் பிரதமரினதும் செயலாளர்கள், முப்படைகளினதும் தளபதிகள், காவற்துறை மா அதிபர், குடிமக்கள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பு பிரதானிகள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *