அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், வவுனியா நாமல் கம பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜயதீலக்க நேற்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
நாமல் கம பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் அமைச்சர் பதியுதீன் முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற தயாராகி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியை நிராகரித்துள்ள மாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க, மேலும் தெரிவிக்கையில் நாமல் கம என்பது முழுமையாக சிங்களவர்கள் வாழும் பிரதேசம் எனக்வும் கூறினார்.
வவுனியாவில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில், அந்த ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் ஓரு சிலர் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.