(எம்.சஹாப்தீன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான இரு மௌலவிமார்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் இடைநிறுத்தியிருந்தார். இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டி அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்
அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலமா சபையின் பிரதிநிதிகளாகிய மௌலவிகள் ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம்.இல்யாஸ் இருவரும் தாம் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து நியாயமற்ற முறையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலமா சபைக்கு அறிவித்துள்ளார்கள்.
அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
கட்சியின் தலைவருக்கோ, கட்சிக்கோ எவ்வித சதி முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்றும்
கூறியிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் யாப்பு குர்ஆன்,
ஹதீஸிற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ளதால் உலமா சபையின் உதவியை இதுவிடயத்தில்
நாடியிருக்கின்றார்கள்.
எனவே, உலமா சபையின் இரு மௌலவிகளின் இடைநிறுத்தல்களை மீள்பரிசீலனை
செய்வதுடன், இது தொடர்பில் தங்களின் பதிலையும் எதிர்பார்க்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.