பெண்களுக்கான உரிமை விடயங்களில் சமத்துவத்துடன் அவர்களது உரிமைகளை பேண அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் மாதவிடாய் காலத்தின் போது முப்பது வீதமான பெண்களே நப்கீன் பாவனை செய்கிறார்கள் ஏனைய கிராமிய மட்ட பெண்கள் துணி வகைகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது தற்போது இதற்கான வரி 15 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது இதனை கவனத்திற் கொண்டு கட்டுப்பாட்டு விலை கொண்டு வர வேண்டும் என விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சமுதாய ஒருங்கிணைப்பாளர் கே.சிவஞோதி தெரிவித்தார்.
சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினமான இன்று (08) திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் நப்கீன் இன்மை காரணமாக ஆரோக்கியமற்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பெண்களை இக் காலத்தில் ஒதுக்கி விலக்கழிப்படுவது மனவேதனையளிக்கிறது பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ஆடைத் தொழிற்சாலை வேலைத் தளங்களிலும் பிரத்தியேகமான மலசலகூட வசதியின்மை காரணமாக புறக்கணிக்கப்படுகின்ற நிலை உள்ளது ஆண்களுக்கான மலசலகூட வசதியையே சில இடங்களில் பெண்களும் பாவிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் இது விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும். அத்தியவசிய விடயமாக கருதி கட்டுப்பாட்டு விலையை நப்கினுக்காக வழங்க வேண்டும் ஆடைத் தொழிற்சாலைகளில் பெண்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்கிறார்கள் மாத விடா காலத்தில் இவ்வாறாக இதனை போக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு சுமார் மூன்று மாத காலத்தின் பின் தள்ளப்பட்டு உடல் ஆரோக்கியமற்ற கர்பப் பை பிரச்சினைகளை உருவாக்குகிறது.
எனவே இது தொடர்பில் பெண்களுக்கான சமத்துவ நிலை என்ற அணுகுமுறை ஊடாக திறம்பட இது விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.