மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் பாராளுமன்றில் இன்று (02.12.2021) இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள் அருகம்குடா சுற்றுலாப் பிரதேசத்தில் உணரப்படும் தேவைகள் குறித்து பொத்துவில் பிரதேச சபை கெளரவ தவிசாளர் M அப்துர் ரஹீம் அவர்களினால் எத்திவைக்கப்பட்ட விடயங்களை சமர்ப்பித்தார்.
அருகம்குடா பிரதேசமானது சுற்றுலாத்துறையில் உலகளவில் மிகவும் பிரசித்தமானது. ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாவிகள் அருகம்குடாவை தரிசிக்கின்றனர். சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு ஈட்டப்படும் வருவாயில் அருகம்குடாவின் பங்கும் கணிசமானது. இருப்பினும் சுற்றுப் பிரயாணிகளுக்கான பொது வசதிகளின் குறைபாடு அங்கு இன்னும் நிவர்த்திக்கப்படாமல் தேங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் சஞ்சாரம் அடர்த்தியாக இருக்கின்ற போது, ஏதேனும் அனர்த்தங்கள் நிகழ்ந்தால் உடன் நடவடிக்கை எடுப்பதில் அங்கு நிகழும் குறைபாடுகளை கருத்திற்கொண்டு மாநகர சபைகளுக்கு வழங்கப்படுகின்ற தீயணைப்பு பிரிவு ஒன்றை பொத்துவில் பிரதேச சபையில் நிறுவித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டிக் கொண்டார்.
மேலும் அருகம்குடாவானது மீன்பிடியும், சுற்றுலாத்துறையும் கலந்த இடம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரையும், அதன் சுற்றுப் புறமும், உள்ளக வீதிகளும் சுத்தமாகவும் அழகாகவும் பேணப்பட வேண்டியது அவசியம். இதனை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைக்கு கடற்கரை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை வழங்குமாறு கேட்டிருந்தார்.
அத்துடன் அன்றாடம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்துகின்ற மிகப் பழமையான பொத்துவில் பஸ்நிலையம் அடிப்படை வசதி, பயணிகள் ஓய்வெடுப்பதற்கான வசதிகளின்றி காணப்படுகிறது. இது மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் அவர்கள், இவை தொடர்பாக அமைச்சினால் தாபிக்கப்பட்டுள்ள பணிக்குழுவினுள் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களையும் உள்வாங்கி அரும்குடா பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகளை விரைவாக நிவர்த்திக்குமாறு பணித்தார்.