புத்தளம் நகரில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (30) காலை புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடையாக்குளம் , மணக்குன்று மற்றும் நூர்நகர் உள்ளிட்ட பல தாழ்ந்த பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் கடவைக்கு அருகில் உள்ள சிறிய பாலம் காணப்படுவதால் வெள்ளநீர் வேகமாக வழிந்தோட முடியாமல் தேங்கி காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, குறித்த பாலத்தை உடைத்து அகலமாக்கி தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கைக எடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தாங்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருவதுடன், தமது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது அருவாக்காட்டில் இருந்து சீமெந்து தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு கற்களை ஏற்றிவந்த ரயிலும் பொதுமக்களால் மறிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த ரயில் பாதையை மறைத்து கூடாரங்களையும் அமைத்து உட்கார்ந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் , சுலோகங்களையும் ஏந்தியவாறு தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அங்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் புத்தளம் நகர பிதா எம் எஸ். எம் . ரபீக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.
புத்தளம் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி குறித்த பாலத்தை உடைத்து அகலமாக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தெரிவித்தார்.
எனினும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தங்கள் அவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புத்தளம் மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு மாலை அதிகாரிகள் சகிதம் வருகை தந்திருந்தார்.
இதன்போது, உரிய முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவும், ரயில் பாதையை மறித்து அமைக்கப்பட்ட கூடாரங்களை அப்புறப்படுத்தி விட்டு களைந்து செல்லுமாறும் மாவட்ட செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.
எனினும், இதற்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு செல்லப்போவதில்லை என கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அரசியல் பிரமுகர்கள், மூவின மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, புத்தளம் தலைமையக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.