ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் பலம் கிடைக்காத வகையில் அவர் ஒரு வட்டத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal piyatissa) தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்டு செய்யப்பட்டு செய்யப்பட்ட ஒன்றெனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கூட்டணியில் தலைவராக இருக்க வேண்டும்.
எனினும் அரசியல் ரீதியாக அவர் அரசியல் சக்திகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதில்லை. திட்டம் தீட்டியுள்ளவர்களுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை தீவிர வலதுசாரி பாதையில் கொண்டு செல்வதற்காகவே ஜனாதிபதி, அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனித்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலைமையை பார்த்தே பிரதமர் மகிந்த ராஜபக்ச மிகவும் வேதனையாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றினார்.
நிலவும் நிலைமை இன்னும் சீராகவில்லை. இப்படி சென்றால், இந்த பயணம் தோல்வியிலேயே முடியும் எனவும் நிமல் பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.