Breaking
Sun. Nov 24th, 2024

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு – முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று – அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்பதை நான் நேற்றுத் தெரிவித்ததுடன்,

பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதையும் நான் நேற்றுச் சுட்டிக்காட்டினேன்.

அதற்கு அவசியான மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளதென்பதையும் நான் எடுத்துரைத்ததுடன்,

அதன் காரணமாக, கோரிக்கைகளை முன்வைக்கும் கவனமாக இருக்குமாறும், மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சியினருக்குத் தெரிவித்தேன்.

உலகளாவிய உயர் தொழில்நுட்பத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள-

“தெற்காசியாவின் பிரவேசமான அதிவேக வான் நுழைவாயில் ” என்று கருதப்படுகின்ற –

“கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani)மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும் நானும் நேற்று மாலை அதனை மக்கள் பாவனைக்காகக் கையளித்த நிகழ்வின் போதே மேற்கண்ட விடயத்தை நான் குறிப்பிட்டார்.

பிரதமரும் நானும் இணைந்து, “கல்யாணி பொன் நுழைவாயில்” பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து, புதிய களனி பாலத்தை திறந்து வைத்தோம்.

அதன் பின்னர், பாலத்தின் இரு மருங்கிலும் ஒளிரும் புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய மின் அலங்காரக் கட்டமைப்பையும் இயங்கச் செய்தோம்.

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற மற்றும் வெளியேறுகின்ற வாகனங்கள் காரணமாக, களனிப் பாலத்தில் ஏற்படுகின்ற அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வாக, இந்தப் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பங்களிப்புடன் – 2012ஆம் ஆண்டில் இதற்கான அடிப்படைத் திட்டம் தயாரிக்கப்பட்டு – 2013ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் – நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி – 2014ஆம் ஆண்டில் கிடைத்தது.

அந்த ஆண்டிலேயே இதற்குரிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

இந்த திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான காணிகள் என்பன வேறு இடங்களில் வழங்கப்பட்ட பின்னர் – 2017ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு, 55,000 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இப்பணியை நிறைவு செய்வதற்கு, நான்கு வருடகாலம் தேவைப்பட்டது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரையான 06 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,

அங்கிருந்து ஒருகொடவத்தை மற்றும் இங்குறுகடைச் சந்தி வரை 04 வழித்தடங்கள், இந்தப் புதிய மேம்பாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், இங்குறுகடைச் சந்தியிலிருந்து கொழும்புத் துறைமுகநகர் வரையும் ஒருகொடவத்தையிலிருந்து அத்துருகிரிய வரையிலும் – தூண்களின் மேல் அமைக்கப்படுகின்ற அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

களனி ஆற்றின் நீர் வடிந்தோடலுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாத வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும்,

சுற்றாடலின் அழகைப் பாதுகாக்கும் வகையில் கொபோநீலம், எசல (திருக்கோனை), மாராமரம், இலுப்பை, கும்புக்கன் உள்ளிட்ட மரங்கள் இப்பாதையின் இரு மருங்கிலும் நடப்பட்டிருப்பதும் – சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வின் போது நான் மேலும் கூறுகையில் –

2005 – 2010 மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதுடன், நாட்டின் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிலையான தீர்வை நான் பெற்றுத் தருவேன் என்பதையும் குறிப்பிட்டேன்.

கொவிட் தொற்றுப் பரவல் காலத்திலும்கூட, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காகப் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையும்அவையனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுப்படுவதனையும் நான் நேற்று சுட்டிக்காட்டியதுடன்,

எதிர்காலத்தில் நாட்டை மூடவேண்டி ஏற்படாதிருப்பின் – உறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய முடியுமென்பதையும் நான் கூறினேன்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – “ எமது நாட்டு மக்கள் புத்திசாலிகள். அதனால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போலிச் செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாம். கொவிட் சவாலுக்கு மத்தியிலும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இடைநிறுத்த, எதிர்க்கட்சியினருக்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம்” என்றார்.

“அன்று மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதி அவர்கள், கிண்ணியா பாலத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான அனைத்து திட்டங்களையும் தயாரித்திருந்தார். ஆனால், கடந்த அரசாங்கம் அதனைக் கவனத்திற் கொள்ளாததால் ஏற்பட்ட துர்விளைவுக்கு வருந்துகிறோம். அந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருப்பின், பெறுமதிவாய்ந்த உயிர்களைப் பாதுகாக்க முடிந்திருக்கும்” என்பதனையைம் அமைச்சர் நினைவூட்டிக் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசூகொஷி் ஹிதெகி –

“கல்யாணி பொன் நுழைவாயில்” பாலமானது, ஜப்பான் – இலங்கை நட்புறவின் மேலுமோர் அடையாளம் என்றார். அத்துடன், எதிர்காலத்திலும் ஜப்பானின் உதவிகளை இலங்கைக்குப் பெற்றுத்தருவோம்” என்று கூறினார்.

மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், அமைச்சரவையின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *