எதிர்வரும் டிசம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று தெரிவித்தார்.
புத்தளம் தில்லையடி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மாலை பார்வையிட வருகை தந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று காரணமாக எமது நாடு பல சவால்லகளுக்கு முகம் கொடுத்துள்ளது.
இன்று டொலர் இல்லாத பிரச்சினையோடு, பொருளாதார ரீதியாக எமது நாடு நளிவடைந்துள்ளது.
சவால் மிக்க இந்த கால கட்டத்திலும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் எமது ஜனாதிபதி, பிதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு நிவாரணம் அடங்கிய பட்ஜட் பொதியை வழங்கியிருக்கிறார்கள்.
எனவே, 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதைப் போலவே, 2022 வரவு செலவு திட்டத்திற்கும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.
அ.இ.ம.கா , ஸ்ரீ.மு.கா உள்ளிட்ட கட்சிகள் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணியில் தனித்துப் போட்டியிட்டதுடன், அதில் பாராளுமன்ற உறுப்பினராக அலிசப்ரி ரஹீம் தெரிவானார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கியது முதல் அரசுக்கு ஆதரவு உறுப்பினராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.