Breaking
Mon. Nov 25th, 2024
புதிய அரசமைப்பு திருத்தம் இனங்களுக்கு – சமூகங்களுக்கு – மதங்களுக்கு இடையில் பிளவு – மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஒரு சமூகம் அனுபவித்துக் கொண்டுள்ள சலுகைகள் – உரிமைகள் வசதிகள் என்பவற்றை இல்லாமல் செய்கின்ற ஒரு அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத்தெரிவித்தார்.

நிதி குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று வியாழக்கிமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

அரசமைப்பு திருத்தம் (மறுசீரமைப்பு)  மேற்கொள்வதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியுள்ளோம். இந்த நாட்டுக்கு புதிய அரசமைப்பு தேவை என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளார்கள். இந்த அரசமைப்பு திருத்தம் மேற்கொள்வதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், இந்நாட்டில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் – இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசமைப்பாகவே அது அமைய வேண்டும்.

இந்த சட்ட மூலங்கள் இனங்களுக்கு – சமூகங்களுக்கு – மதங்களுக்கு இடையில் மீண்டும் மோதல்களை ஏற்படுத்தக் கூடியதாக எந்தவகையிலும் அமைந்துவிடக்கூடாது. ஒரு சமூகம் அனுபவித்துக் கொண்டுள்ள சலுகைகள் – உரிமைகள்- வசதிகளை இல்லாமல் செய்கின்ற ஒரு அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறை மூலம் முஸ்லிம்கள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய தேர்தல் சட்ட திருத்தத்தின் போது முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடுமுழுவதும் எல்லா பாகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் நடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் – உறுதிசெய்யும் சட்ட மூலத்தையே அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறான பிரேரனைகள் மூலமாகவே இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

அவ்வாறே மலையக மக்களது பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். மலையக மக்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பு இன்று இல்லை. ஆகவே சகல சமூகங்களுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவத்தையும்- உரிமைகளையும் பாதுகாக்கின்ற அரசமைப்பாக புதிய அரசமைப்பு திருத்தம் உருவாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களது அரசியல் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோமே அவ்வாறே வடகிழக்கிலும் அதற்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் மக்களது உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இன – மத வேறுபாடுகளை மறந்து ஒண்றினைய வேண்டும். குறிப்பாக தேசிய ரீதியில் புத்தளம், கண்டி, அக்குறனை, கம்பளை, மாவனல்லை, அநுராதபுரம், குருநாகல், கிழக்கு மாகாணம், வடக்கிலே மன்னார் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை மையப்படுத்தி முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று வடகிழக்கு மற்றும் மலைய மக்களது பிரதிநிதித்துவம் பாதுகாக்கும் வகையில் விசேட தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும்  என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *