Breaking
Mon. Nov 25th, 2024

ஒன்பது வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்சவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலவந்தமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“நமது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற மூத்த அரசியல்வாதி தான் மகிந்த ராஜபக்ச. பிரதமர் மகிந்த ராஜபக்சவிடத்திலும் நாடாளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது.

மகிந்த ராஜபக்ச என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்குப் பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூரச் சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மகிந்த ராஜபக்ச ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது.

ஒன்பது வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலவந்தமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள்.

அவர் எத்தனையோ புரட்சிகளை செய்தார். அவருடன் நாம் பக்கபலமாக இருந்து செயற்பட்டோம். ஆனால் இந்த இரண்டு வருட ஆட்சியில் சண்டித்தனமாக எமது உரிமைகளை பறிக்கின்றீர்கள். நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளைக்கூட இந்த சபையில் ஒரு இனத்தின் மக்கள் தலைவனாக கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை.

எனது குரலை அடக்கினீர்கள். இவ்வாறான செயல்கள் மூலம் உங்களால் இந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாது என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *