Breaking
Mon. Nov 25th, 2024

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் பின்னால் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பீற்றர் இழஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் இன்று (16) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இதன்போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசத்தினுடைய வரலாற்றிலே எம் இனத்திற்காக போராடி மரணித்தவர்களுடைய வரலாற்று நாள் கார்த்திகை 27. அன்றைய தினத்தை மாற்றி அமைக்கும் சக்தியாக இன்று இந்த வடக்கு கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவை முனைகின்றதாக என்ற கேள்வி எழுகின்றது.

உண்மையிலேயே நானும் ஒரு கத்தோலிக்கன். நானும் ஒரு மாவீரனின் சகோதரன் என்ற அடிப்படையிலே இந்த வடக்கு கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவையிடம் கோரிக்கையாக இதை முன்வைக்கிறேன். கத்தோலிக்கர்கள் கார்த்திகை மாதம் இரண்டாம் திகதி இறந்த ஆத்மாக்களுக்கான ஒரு திருவிழாவாக சேமக்கலைகளிலே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது . இருந்த போதும் அதே மாதத்தில் எம் தேசியத்தின் பால் எமக்காக போராடி மரணித்த மாவீரர்களுடைய நாளாக கார்த்திகை 27ம் திகதி முப்பது நாப்பது வருடங்களாக நாங்கள் அனுஸ்ரித்து வருகிறோம். இது கடந்த காலங்களிலும் தொடர்ந்து வருகிறது. அதே நாளிலே இதே கத்தோலிக்க மதத்தை சேர்ந்த ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாதிரியார்கள் அந்த நாளிலே அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்கள்.

ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் சில செய்திகளை பார்த்திருந்தேன். உயிரிழந்த உறவுகளுக்கு எதிர்வரும் 20 ம் திகதி அஞ்சலி செலுத்த ஒன்று கூடுமாறு கோரியிருந்தனர். இதன் பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கள் வந்ததன் பின்னணியில் நேற்றைய தினம் செய்திகளில் பாத்திருந்தேன் கத்தோலிக்கர்களை மட்டும் அழைத்ததாக. உண்மையிலேயே கத்தோலிக்கர்கள் கார்த்திகை மாதம் 2ம் திகதி தமது திருவிழாவை கொண்டாடி வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு நாளை கொண்டாடுவது என்பது சில வேளைகளில் எமது தமிழ் தேசியத்தின் பால் உயிரிழந்த மாவீரர்களுடைய நினைவு நாளை வேறொரு சக்தியினூடாக அந்த நாளை அழிப்பதற்காக தான் இந்த அழைப்பை விடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

நான் ஒரு மாவீரனுடைய சகோதரன் என்ற அடிப்படையிலே வெளிப்படையாக, நேரடியாக இந்த ஊடகங்கள் வாயிலாக வடக்கு கிழக்கு ஆயர்கள் அமைப்பிடம் ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். தமிழ் மக்களுடைய இந்த போராட்டத்திலே பல அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் எங்களுடைய இனத்துக்கான போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள். இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு ஆயர் பேரவை இந்த தினத்தை மாற்றி அமைப்பது உண்மையிலே ஒரு கேலிக்கூத்தான விடயமா அல்லது இவர்களுக்கு பின்னால் ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்ற கேள்வியும் இப்போதும் எம்மிடம் கேள்விக் குறியாகவே உள்ளது.

உங்களுடைய சமய வழிபாடுகளை நீங்கள் வேண்டுமானால் உங்கள் தேவாலயங்களில் பூசைகளை வைக்கலாம். வருடம் 365 நாளும் இடம்பெறும் ஒவ்வொரு நாள் திருப்பலிகளிலும் இறந்த ஆத்மாக்களுக்காக மன்றாடப்படுகிறது. அதே நேரத்தில் எமது வரலாற்று திகதியினை மாற்றி அமைத்து 20 ஆம் திகதியினை கோருவது உண்மையிலேயே பொருத்தமற்ற விடயம். ஆகவே இதனை நீங்கள் மாற்றி அமைக்காது கார்த்திகை 27 ம் திகதி எம் தேசத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலி செலுத்த தடை இருக்காது. அன்றைய நாள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆயர் பேரவையும் ஒன்றிணைந்து எங்களுடைய மாவீரர் நாளை கொண்டாட நீங்கள் வழிவகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *