இன்றைய தினம் வேலைநிறுத்தம் இடம்பெறாது என்றும் இலங்கை மின்சார சபைக்கு முன்பாக அனைத்து மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், எனினும், பராமரிப்புச் சேவையில் இருக்கும் ஊழியர்களை தாம், கொழும்புக்கு அழைப்பதாகத் தெரிவித்தார்.
அனல்மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என்றும் ஊடகங்களிடம், தெரிவித்தார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், ஆயிரம் தடவைக்கு மேல் ஆலோசித்து வருவதாகவும் இன்றைய தினத்துக்குப் பின்னர், ஒரு நாள் நிர்ணயம் செய்யப்படும்’ என்றார்.
“கோட்பாட்டின் படி, மின் நிலையங்களில் நாங்கள் இல்லாமல், நிலையான மின்சாரம் வழங்க வழி இல்லை என்பதை அறிவோம்,” என்று சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், 1996 இல் அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது.
தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்குமே இந்தப் போரட்டம் நடத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.