தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(Saanakkiyan) முதலமைச்சர் கனவுடன் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய பொதுஜன கட்சியின் தலைவர் ருவான் பேதுரு ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல்வாதிகள் இங்கு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து செயற்படுவதை நான் காண்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் ஒரு பகுதி மக்களை வேறுபடுத்தியும் இன ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கம் சார்பில் செயற்படும் சந்திரகாந்தன்(Santhirakanthan), வியாழேந்திரன்(Viyalenthiran) போன்றவர்கள் வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளைப் பார்த்துத் தீர்த்து வைப்பதற்கு இவ்வாறானவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். நாங்கள் அவ்வாறான அரசியலை முன்னெடுப்பதில்லை. நாங்கள் இந்த நாட்டு மக்களை ஒன்றாகவே நோக்குகின்றோம்.
அவர்களின் பிரச்சினைகளையே தீர்ப்பதற்கு முயற்சிக்கிறோம். இங்குள்ள அரசியல்வாதிகள் இங்கு வாழ்ந்த சிங்களவர்களை குடியேறவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் இங்கு வாழ்ந்தவர்கள்.
அவர்கள் வாழ்வதில் என்ன தவறு இருக்கின்றது. தமிழ்-சிங்கள மக்கள் ஒன்றாக வாழ்வதையே நாங்கள் விரும்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.