வரலாற்றுக் காலம் முதல் மன்னார் முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் ஒற்றுமையாகவும் சகவாழ்வோடும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி காணப்படுகின்றன.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேற்றமும் இடப்பெயர்வும் இடம்பெற்றன. இதனால் இம்மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது. பலர் தொழில்களை இழந்ததால் மனநோயாளிகளாக மாறினர். இவ்வாறு சீரழிந்து செல்லும் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலேயே 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவானது.
யுத்தம் நிறைவுற்றதும் வெளியேற்றப்பட்ட மக்களும் வெளியேறிய மக்களும் மீண்டும் தங்களது தாயக மண்ணில் குடியேறினர். மீண்டும் தங்களது பாரம்பரிய தொழிலான விவசாயம், மீன்பிடி என்பவற்றை செய்ய ஆரம்பித்தனர்,
மீன்பிடி தொழிலாளிகள் உரிய உபகரணங்களை கடணாகவோ விலைக்கோ வாங்கி தொழிலை ஆரம்பித்தனர். ஆனால் விவசாயிகளுக்கு அவ்வாறு உடணடியாக தொழிலை ஆரம்பிக்க முடியவில்லை. சுமார் 20 வருடங்களாக பாவனை இன்றி கிடந்த அவர்களின் நிலங்கள் அடர்ந்த காடுகளாக காணப்பட்டன. இவைகளை அழித்து வயல் நிலங்களாக மாற்றுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள். மேலும் சீரான நீர்ப்பாசன வழிமுறைகளும் காணப்படவில்லை.
முசலியும் நீர்ப்பாசன முறையும்
முசலிப் பிரதேசம் இரண்டு பிரதான நதிகளினூடாக நீரைப் பெறுகின்றது. மல்வத்து ஓயாவின் (அருவி ஆற்றின்) கீழ் அகத்திக்குளம் மற்றும் நெடுங்குளம் ஊடாக சுமார் 5000 குடும்பங்கள் நீரைப் பெற்று விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர். அதேபோல் இப்பிரதான குளங்களின் கீழ் வாழ்கின்ற அதிகமானவர்கள் நன்னீர் மீன்பிடிப்பிலும் ஈடுபடுகின்றனர்.
முசலிப் பிரதேசத்தின் இன்னுமொரு பகுதியால் நீரை கொண்டு வருகின்ற பிரதான நதியாக மோதரகம ஆறு (உப்பாறு) காணப்படுகின்றது. இவ்வாற்றின் கீழ் உள்ள வியாயடி குளத்தின் மூலம் சுமார் 3000 குடும்பங்கள் நீரைப் பெற்று இருபோகம் விவசாயம் செய்கிறார்கள். அதேபோல் இப்பிரதேச மக்கள் நன்னீர் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர்,
முசலியில் சிறுபோக வேளாண்மை
இப்பின்னணியில் பிரதான குளங்களான வியாயடி, அகத்தி மற்றும் நெடுங்குளம் ஆகியவற்றில் வியாயடிக்குளம் 2009 இன் பின்னரான மீள்குடியோற்றத்தோடு ஓரளவு அபிவிருத்தி அடைந்தது, அதன்கீழுள்ள பாலைக்குளி, மறிச்சுக்கட்டி, கரடிக்குளி மற்றும் முள்ளிக்குளம் விவசாயிகள் இருபோக வேளாண்மை செய்து தங்களது ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்கின்றனர். ஆனால் இக்கிராம விவசாயிகள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை,
ஆனால் புதிய குடியேற்றமான ஹுனைஸ் நகர் மக்களுக்கு விவசாயம் செய்வதற்கான போதிய இடவசதி வழங்கப்படவில்லை. இருக்கின்ற காணியில் விவசாயம் செய்வதற்கு நீர் வசதி இல்லை, எனவே வியாயடிக் குளத்தில் இருந்து வாய்க்கால் மூலமாக நீரை ஹுனைஸ் நகர் மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதனை உயர் அதிகாரிகள் மேற்கொள்வார்களா?.
முசலிப் பிரதேசத்தின் பிரதான பாரிய நீர்ப்பாசன திட்டம் அகத்தி நீர்ப்பாசன திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 5000 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒரு வருடத்தில் பெரும்போக வேளாண்மை மாத்திரம் செய்துவிட்டு ஏனைய காலத்தில் வீட்டில் இருந்து காலத்தைக் கடத்துவார்கள், இவர்களுக்கு மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை,
இம்மக்களுக்கான சிரந்த நீர்ப்பாசன வழிமுறைகள் இல்லாமையே இதற்கான பிரதான காரணமாகும், இவர்களுக்கான நீர்ப்பாசன திட்டம் காணப்படுகின்றபோது இவர்கள் இருபோக வேளாண்மை செய்து தங்களது வாழ்வாதார வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்வார்கள்.
ஆனால் கோடை காலங்களில் அருவி ஆற்றில் இருந்து அகத்திக் குளத்திற்கு நீரைக் கொண்டு வருவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன, அது காலா காலமாக உள்ள பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் சுமார் 500 மில்லியன் நிதி தேவைப்படுகிறது, இந்நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை செய்ய இன்னும் ஒரு அரசியல் பிரதிநிதி உருவாகவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இப்பின்னணியில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் இவ்வருடம் (2021) இப்பிரதேச பொறியியலாளர் எம், முனாஸின் முயற்சியால் பரீட்சாத்தமாக சுமார் 100 ஏக்கர் நிலத்தில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அறுவடை நிகழ்வு நேற்று புதன்கிழமை 25.08.2021 அன்று மன்னார் மாவட்ட அதிகாரியின் தலைமையில் பிராந்திய பொறியியலாளர்கள், முசலிப் பிரதேச செயலாளர் உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் வெற்றி பெறுவத்காக ஒத்துழைப்பு வழங்கிய நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நடராசா யோகராசா, முதன்மை பொறியியலாளர் கிரிசாந்தன், பிரதேச செயலாளர், திட்ட முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் திணைக்களத்தின் தொழில்நுட்ப வெளிக்கள உத்தியோகத்தர் அனைவரின் ஒத்துழைப்பின் முலமே வெற்றியடைந்தது. இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இவர்கள் எப்போதும் எமது மரியாதைக்குரியவர்கள்.
இத்திட்டம் மேலும் வளர்ந்து இப்பிரதேசத்தில் இருபோக வேளாண்மை செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
P.M. முஜீபுர் றஹ்மான்