அன்பான சோதரரே அல்லாஹ் நமக்களித்த
சிந்தைக் கினிய இஸ்லாம் தேர்ந்த கடமைகளில்
ஹஜ்ஜுக் கடமை கடைசியென யாமறிவோம்
ஹஜ்ஜின் வரலாறு சிறப்பறிய வேண்டுமன்றோ?
ஆண்டுகள் நாலாயிரத்துக்கு முன்பாக
அண்ணல் நபி இபுறாகீம் அவதரித்தார் ஈராக்கில்
கல்வி தொழில் அங்கிருந்தும் கலைகள் பலவிருந்தும்
வல்ல இறை நம்பிக்கை இல்லாத மாந்தரங்கே
பொல்லா அனாச்சாரப் படுகுழியிலே வாழ்ந்தார்.
சமயகுரவர்களும் சண்டாள மன்னர்களும்
இமயத்தவறு செய்து ஏமாற்றியே பிழைத்தார்
பூசாரி வர்க்கத்தில் பிறந்த நபி இபுறாகீம்
ஆசாரங்கள் வெறுத்தார் ‘அல்லாஹ் ஒருவன்’ என்றார்.
“சூரியனும் சந்திரனும் சூழ்ந்த உடுக்கணமும்
காரியங்கள் செய்யவல்ல கடவுளல்ல” என்றுரைத்தார்
“எப்பொருளையும் படைத்த ஏக இறை ஒன்றை மட்டும்
தப்பாமலே தொழுவோம் வாருங்கள்” என்றழைத்தார்
ஏக தெய்வக் கொள்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியது
வேக விட்டார் தீயினிலே வேதநபி மாண்டிடவே
அல்லாஹ் அருள் சுரந்தான் அக்கினியுமே குளிர்ந்து
நல்ல மலர் மஞ்சமாய் மாறியதே அந்நெருப்பு
நாடு விட்டுச் சென்ற நபி நல்ல மனையாளுடனே
ஏடு கொள்ளாத் துன்ப துயரம் எதிர்கொண்டார்
சிரியா பலஸ்தீனம் எகிப்தென்னும் தேசத்தே
விரிவாகத் தம்பணியைத் தியாக நபி செய்தனரே
எண்பத்தியாறு வயது கடந்த பின்னே
இனி என் பணிதொடர வாரிசொன்று வேண்டுமென்றார்
இஸ்மாயில் என்னும் இனிய மகவொன்றை
ஏகன் அருளினானே ஏந்தல் நபி மகிழ்ந்தார்
தந்தை போல் மைந்தரவர் சாந்த குணசீலராய்
தந்தைக் குதவுகின்ற தகைமை மிகப் பெற்றிருந்தார்
அல்லாஹ்வின் ஆணைக்கடி பணிந்து அம்மகனை
அறுத்துப் பலியிடவும் அண்ணல் துணிந்தனரே
பலியிடும் சங்கதியைப் பாலர் இஸ்மாயில் அறிந்து
வலிய வந்து தம்கழுத்தை வாஞ்சையுடன் கொடுக்க
அறுத்தார் இபுறாகீம் ஆயுதமும் அறுக்கவில்லை
அந்நேரம் அல்லாஹ்வின் அருள்வாக்கும் வந்ததுவே
“இறையாணை சிரமேற்கொண் டொழுகி உம்தியாகத்தை
நிறைவேற்றி விட்டீர் நீரே உலகுக்குத்
தகைமை மிகும் வழிகாட்டி தனயனுக்கு பதிலாக
ஆடொன்றறும்” என்றே ஆணையிட்டான் அல்லாஹ்வும்
உலகின் தலைமை பெற்ற உத்தமராம் இபுறாகீம்
பலநாள் இறைபணியில் பரிவுடனே ஈடுபட்டார்
அல்லாஹ்வின் ஆணைக்கமையவே கஃபாவை
அமைத்தார் நபியவர்கள் அன்பு மகன் உதவியுடன்
இறைநேசர் இபுறாகீம் இறையாணை பெற்றதனால்
இஸ்லாத்தை ஏற்றவர்க்கு எத்திவைத்தார் ஹஜ் கடமை
பரிசுத்த கஃபாவை பக்தி சிரத்தையுடன்
தரிசித்து முஸ்லிம்கள் ஹஜ்கடமை மேற்கொண்டார்.
காலவோட்டத்தில் ஹஜ்கடமை மாசடையக்
கற்சிலைகளை நிறுவிக் காதகர் வணங்கினரே
இரண்டாயிர மாண்டு இருள் சூழ்ந்து சென்ற பின்னர்
இபுறாகீம் கோத்திரத்தில் இறுதிநபி தோன்றினரே
கலைமறை முஹம்மது ஸல் கற்சிலைகளை அகற்றி
கஃபாவின் பரிசுத்தம் கண்ணியத்தை பேணினரே
‘ஹஜ்ஜு’ கடமையெனப் பிரகடனம் செய்த நபி
ஹஜ்ஜும் செய்தெமக்கு வழிகாட்டிச் சென்றனரே
இஸ்லாத்தின் தத்துவத்தை
எத்திசைக்கும் கொண்டு செல்லும்
அழகான கேந்திரமாய் அமைந்த கஃபாவினிலே
வசதி படைத்தவர்கள் வாழ்நாளில் ஹஜ்ஜதனை
விரைவாய் நிறைவேற்றல் வேண்டும் கடமையன்றோ?
ஆண்டான் அடிமையென்றும் அறபி அஜமி என்றும்
வேண்டாத பேதமின்றி வெண்ணிற இஃறாமணிந்து
பள்ளியமர்ந்திறையின் பண்ணோதும்மக்கள் வெள்ளம்
கண்ணாரக் காண்பதுவும் கண்செய்த பாக்கியமே!
உடல்நலமும் பணபலமும் உண்மையிலே பெற்றிருந்தும்
கடமை ஹஜ் என்பதனைக் கருத்தூன்றிச் செய்யாமல்
மடமையிலே காலத்தை வீணடித்த பேர்வழிகள்
திடமாக நஷ்டத்தில் வீழ்ந்திடவும் நேருமென்றோ!
சுஐப் எம்.காசிம்-