‘மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு ஐயா அவர்களின் இறப்பு எமது கட்சிக்கு மாத்திரமல்லாமல், எமது மாந்தை சமூகத்திற்கும் பாரிய ஒரு இழப்பாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும், கட்சியின் முக்கியஸ்தரும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவரது அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு அவர்களது மறைவு உண்மையில் மன வேதனை அளிக்கின்றது. எம்மோடும் எமது கட்சியோடும் இணைந்து இரவு, பகல் பாராது, அயராது அவர் ஆற்றிய சேவை எம்மால் என்றும் மறக்க முடியாதது. இன, மத பேதமின்றி, சமூக ரீதியாக எம்மோடு இணைந்து பயணித்த ஒரு சேவகர். அவருடைய அளப்பரிய சேவைக்கு வார்த்தைகள் கிடையாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது செலத்தம்பு ஐயா அளவுக்கதிகமான அன்பு கொண்டிருந்தார். யுத்த காலத்திலேயே தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களின் போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த மக்களுக்கு செய்த உதவிக்காக அவருக்கு நன்றி பாராட்டியதோடு, அவரது கட்சியில் இணைந்து, அதன் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டார். இன ஒற்றுமைக்கு பாலமாக இவர் செயற்பட்டதனால் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். இதனாலேயே மாந்தை மேற்கு பிரதேச சபையில் பெரும்பாலான வட்டாரங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன், சபையின் தவிசாளராகவும் செல்லத்தம்பு ஐயா தெரிவு செய்யப்பட்டார்.
மன்னாருக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் செல்லத்தம்பு ஐயாவும். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் எங்கேயாவது சந்தித்துப் பேசுவதுண்டு. அநேகமான சந்தர்ப்பங்களில் அவர் செல்லத்தம்பு ஐயாவின் வீட்டுக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகளையும் குறை நிறைகளையும் கேட்டறிவதுண்டு. அதுமாத்திரமின்றி, அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக செல்லத்தம்பு ஐயா இறக்கும் வரை இருந்தார் என்பதை இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறோம்.
அதேபோன்று, மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும், மாந்தை மேற்கு பிரதேச சபையின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும். அவ்வாறான ஒரு மனிதனின் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாதது.
அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.