மத வழிபாட்டுத்தலங்களில் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இந்த விடயம் தொடர்பான அறிவிப்புகளை விடுத்துள்ளன.
ஆலய அறங்காவலர்கள் மற்றும் சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.
COVID-19 கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சினால் நேற்று வௌியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய, அனைத்து ஆலயங்களிலும் ஒரு தடவையில் 50-க்கும் அதிகரிக்காத பக்தர்களுடன் கிரியைகளை நடத்த வேண்டும் எனவும், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியை பெறுதல் அவசியம் எனவும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றுவதை ஆலய அறங்காவலர் சபையினர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்து சமய , கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நேரத்தில் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வீட்டில் வுழூ செய்து கொண்டு பள்ளிகளுக்கு செல்லுமாறும் பள்ளிவாசல்களில் வுழூ செய்யும் பகுதி மூடி வைக்கப்படல் வேண்டும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து நெறிமுறைகளையும் வக்பு சபையின் முன்னைய பணிப்புரைகளையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.