Breaking
Mon. Nov 25th, 2024

நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுத்தீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜனநாயக விரோத நடவடிக்கை வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புனித ரமழான் மாதத்தில் நடுநிசியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டுக் கவலையடைகின்றேன்.

இவ்வாறான முறைகேடான அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதுகள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்குகின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட பின்னரும், பேராயர் போன்றோரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கத்தக்கதாக, அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களும் மேலோங்கியிருக்கும் போது இதற்கான சூத்திரதாரி யார் என்பதை மூடி மறைத்து, மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம் பெறுகின்றன.

முஸ்லிம்கள் மத்தியில் அரசியலில் மேல் மட்டத்தில் உள்ளவர்களை பிரஸ்தாப தாக்குதலோடு தொடர்புபடுத்துவதன் ஊடாக பெரும்பான்மைச் சமூகத்தினரிடையே முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வெறுப்புணர்வையும், வீணான அச்சத்தையும் மேலும் அதிகரிப்பதற்கு இவற்றின் மூலம் வழிகோலப்படுகின்றது.

தேர்தல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரசாரத்தை தென்னிலங்கை கிராமப்புற அப்பாவிச் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சந்தைப்படுத்த இவ்வாறான கைதுகளை அவர்கள் நாசூக்காகச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் கைதுகளும் இவ்வாறனவையே.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தவரை சிறுவர்களை வற்புறுத்திப் பெறப்பட்ட சோடிக்கப்பட்ட வாக்குமூலத்தை வைத்து அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பிணை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் விசனத்துக்குரியது. அதனைச் சுட்டிக்காட்டி நான் பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருக்கின்றேன்.
ரிசாத் பதியுத்தீன் முன்னைய சந்தர்ப்பங்களிலும், புலனாய்வுத் துறையினருக்கும், குற்றத் தடுப்பு பிரிவினருக்கும் விசாரணைகளின் போது ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
குற்றச் செயல்களோடு சம்பந்தப்படாத முஸ்லிம் சமயத் தலைவர்களும் ,ஊடகவியலாளர்களும் கூட கைது செய்யப்பட்டனர்.


பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்படுவது நிச்சயமாக நாட்டின் நற் பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அறவே சந்தேகம் இல்லை.
ரியாஜ் பதியுத்தீன் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலைக்குரியது.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அறிக்கையில் காணப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *