அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார்.
எந்தப் பௌத்த தேரர்கள், ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகக் குரல் கொடுத்தார்களோ, இன்று அவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராகக் கருத்துவௌியிட்டுவரும் காலச்சூழல் உருவாகியிருக்கிறது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றியும் அதைத் தொடர்ந்து, 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் பெற்றுக்கொண்ட பெரும்பான்மைப் பலமும், இனி அசைக்க முடியாத ஆட்சியாக ராஜபக்ஷர்களின் ஆட்சி அமையும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அந்த விம்பம் கலையத்தொடங்கி இருப்பதாகவே, நாட்டு மக்கள் உணர்வதாகத் தெரிகிறது.
ஆளுந்தரப்புக்குள் அதிகாரப் போட்டிகள், ஒரு பனிப்போராகவே உருவெடுத்து உள்ளதையும் ஆளுங்கட்சிக்குள், வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்துநின்று இழுபறிப்படுவதையும் காணமுடிகிறது.
இந்தச் சூழலில்தான், கொழும்பில் காலிமுகத்திடல் அருகே, கடலுக்குள் மண் நிரப்பி, சீனா உருவாக்கிய ‘போட் சிட்டி’ என்ற துறைமுக நகரை, தனியே நிர்வாகம் செய்வதற்காக ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சட்டமூலம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது, ஆளுந்தரப்புக்குள்ளும் ஆளுந்தரப்புக்கு ஆதரவானவர்களிடம் இருந்தும், எதிர்த்தரப்பிலிருந்தும் தாராளவாதிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
அத்துடன், “சீனாவிடம் நாட்டை விற்றுவிடப்போகிறார்கள்; சீனக் கொலனியொன்று இங்கு உருவாகப் போகிறது; இலங்கையின் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் பாதிக்கப்படப்போகிறது” என்ற ராஜபக்ஷர்களின் தாரக மந்திரங்கள், இன்று ராஜபக்ஷர்களுக்கு எதிராகவே, ராஜபக்ஷர்களின் ஆதரவுத்தளத்தாலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு முக்கிய குரல்தான், முறுதெட்டுவே ஆனந்த தேரருடையது. அவரைத்தாண்டி, ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின் குரலும் ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகப் பலமாக ஒலிக்கிறது.
இதன் விளைவாக, “ஜனாதிபதி கோட்டாபய, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டினார்” என்று, ஊடகங்களுக்கு விஜயதாஸ ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்ததோடு, பாதுகாப்பு வேண்டி பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தாண்டி ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தச் சட்ட மூலத்தை எதிர்க்கின்றன.
அரசியல் ரீதியிலான எதிர்ப்பு ஒருபுறம் வலுக்க, மறுபுறத்தில் ஏறத்தாழ 19 மனுக்கள் ‘போட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் பொதுவானதும் சுருக்கமானதுமான வேண்டுதலாக, ‘குறித்த சட்டமூலத்தை, இதே வடிவத்தில் நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் ஒப்புலும் அவசியம் என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்’ அமைகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது, இந்த விடயத்தின் முக்கியத்தவத்தை வௌிப்படுத்தி நிற்கிறது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்னிலையில், குறித்த மனுக்கள் இன்று (19) விசாரிக்கப்படவுள்ளன. விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புடனான இயைபு பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும். நிற்க!
அரசியல் ரீதியாக ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்களே ராஜபக்ஷ அரசாங்கம் முன்வைத்துள்ள ‘போட் சிட்டி’ சட்டமூலத்தை எதிர்க்கக் என்ன காரணம்? இங்கு, இரண்டு பிரதான காரணங்கள் தௌிவாகத் தென்படுகின்றன.
ஒன்று, ஏற்கெனவே அதிகாரப் போட்டி, உட்பூசல்கள் வலுத்துவரும் நிலையில், ராஜபக்ஷர்களுக்கு எதிரானதும் பலமானதுமான பிரசாரத்துக்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்துகிறார்கள்.
இரண்டாவது, ராஜபக்ஷர்கள் பாராட்டி, சீராட்டி, ஊட்டி, காத்து, வளர்த்து, கடந்த ஐந்தாண்டுகளாக ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட தேசியவாதமும் தேசப்பற்றும், இன்று அவர்களை நோக்கி, அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இதை ராஜபக்ஷர்களின் ‘பண்டாரநாயக்க நிலைமை’ என்று சொன்னால், அது மிகையாக இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட அதைப் போன்றதொரு நிலைதான்.
அப்படியானால், ‘போட் சிட்டி’ சட்டமூலத்தில் சிக்கல்கள் இல்லையா என்றால், நிச்சயமாக இருக்கிறது. ஆனால், இங்கு தேசியவாதிகளும் தேசப்பற்றாளர்களும் சுட்டிக்காட்டும் விடயங்கள் எல்லாம், உண்மையில் பிரச்சினைக்கு உரியவைதானா என்றால், ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
‘போட் சிட்டி’ சட்டமூலத்தை “இலங்கையை சீனாவின் கொலனியாக்கும்” என்ற பகட்டாரவாரக் கருத்தில் உண்மை இருப்பதற்கான சான்றுகள் இல்லை. உண்மையில், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கைப் பற்றி கவலைப்பட வேண்டுமானால், சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள கடன்கள் பற்றியும் கடன் பொறி பற்றியுமே அன்றி, ‘போட் சிட்டி’ சட்டமூலத்தைப் பற்றி அல்ல!
நிச்சயமாக, ‘போட் சிட்டி’ நிர்வாகத்தில் இலங்கையர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படுவதற்கான இடைவௌி, அல்லது ஓட்டை, ‘போட் சிட்டி’ சட்டமூலத்தில் உண்டு. ஆகவே, ஜனாதிபதி விரும்பினால் சீனர்களையோ, அமெரிக்கர்களையோ, இந்தியர்களையோ கூட, ‘போட் சிட்டி’ ஆணைக்குழுவுக்கு நியமிக்கலாம். அதற்கான தடைகள் எதுவும் சட்டமூலத்தில் இல்லை.
ஆகவே, இலங்கையின் ஒரு பகுதியை, ‘அந்நியர்கள்’ நிர்வகிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வரிச்சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்கள் பலவற்றிலிருந்து, ‘போட் சிட்டி’யில் முதலிடும் நிறுவனங்களுக்கு விலக்களிக்கும் அதிகாரத்தை, குறித்த ஆணைக்குழு கொண்டுள்ளது.
மேலும், ‘போட் சிட்டி’க்குள் ஏற்படும் சில பிணக்குகளை, கட்டாயமாக நடுவர் தீர்ப்பாயத்தின் மூலம் தீர்ப்பதற்கு ‘சர்வதேச வணிக பிணக்கு தீர்வு நிலையம்’ ஒன்றை அமைப்பது தொடர்பாகக் குறித்த சட்டமூலத்தில் காணப்படும் ஏற்பாடுகள், ‘தனியாக நிர்வாகம்’ என்ற கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக அமைகிறது.
யதார்த்தத்தில், ‘போட் சிட்டி’ போன்ற திட்டத்துக்கு பாரிய வௌிநாட்டு முதலீடுகள் அவசியமாகிற போது, இதுபோன்ற ஏற்பாடுகள் காலத்தின் தேவையாகிறது. ஆனால், எந்தக் குறுகிய தேசியவாதத்தையும் குறுகிய தேசப்பற்றையும் ராஜபக்ஷர்கள் வளர்த்துவிட்டார்களோ, அதுவே அவர்களுக்கு எதிராக, இன்று திரும்பி நிற்கிறது. நிற்க!
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் பற்றி, பாராளுமன்றத்திலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு, புறக்கணிப்பு, வருகைதராமை என்று ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும். இந்த நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள் என்ன செய்யவுள்ளன என்பது, ஒரு சுவாரசியமான கேள்வியாகவே இருக்கிறது.
இந்திய, மேற்குலகு ஆதரவுத் தளத்திலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு, இந்தச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்டிய அழுத்தம் இந்தியாவிடம் இருந்தும், மேற்குலகிடமிருந்தும் வழங்கப்படும். ஆனால், இந்திய, மேற்கு ஆதரவுத் தளத்தில் இல்லாத தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சட்டமூலத்தை எதிர்ப்பதற்கான எந்த ஊக்கக் காரணமும் கிடையாது.
மாறாக, பெருந்தேசியவாதத்தின் பிடிக்குள் சிக்கி, சுருங்கியுள்ள இலங்கை, ‘தேசிய-அரசு’, ‘ஒற்றையாட்சி’, ‘இறைமை’ போன்ற கருத்தியல்களை ஒரு படியேனும் தகர்ப்பதற்கு, ‘போட் சிட்டி’ சட்டமூலம் அறிமுகப்படுத்தும் கட்டமைப்பு உதவுமானால், அது தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மறைமுக வெற்றியாகும்.
அந்தவகையில் பார்த்தால், தமிழ்த் தேசியம் என்ற அடிப்படைகளுக்குள் இருந்து நோக்கும் போது, குறித்த சட்டமூலத்தை எதிர்ப்பதை விட, ஆதரிப்பதற்கான ஊக்கக் காரணங்கள்தான் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியா, மேற்குலகின் ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்த் தேசியம் இதைச் செய்யாது.
மாறாக, “ராஜபக்ஷர்களைத் தமிழர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்” என்ற பகட்டாரவார முகமூடியையும் தேவைப்படின், “நாம் அனைவரும் இலங்கையர்கள்; இலங்கையின் நன்மை” என்ற தாராளவாத முகமூடியையும் இந்திய, மேற்கு சார்பு அரசியலுக்காக தமிழ்த் தேசியம் அணிந்துகொள்ளும். அதன் மூலம் தமிழ் மக்களையும் அதையே ஏற்றுக்கொள்ளச் செய்யும். இது நடந்தால், அது ஆச்சரியப்படுவதற்குரிய ஒன்றல்ல!
மாறாக, இந்தியா, மேற்குலகின் ஆதரவுத்தளத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய கட்சிகள், தந்திரோபாய ரீதியிலும் சரி, கருத்தியல் ரீதியிலும் சரி சட்டமூலத்துக்கு ஆதரவளித்தால்தான் அது ஆச்சரியத்துக்கு உரியது. ‘சிங்கள-பௌத்த’ தலைமைகள் மட்டுமல்ல, தமிழ்த் தலைமைகளும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் நிறையவே இருக்கின்றன. என்.கே. அஷோக்பரன்