Breaking
Wed. May 1st, 2024

அஷ்ரப் ஹசனலிக்கு சொல்லுமளவான உயரிய பதவிகளை வழங்காத போதும் அமைச்சர் ஹக்கீம் செயலாளர் என்ற உயரிய பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் என்ற கருத்தை பரப்பி சிலர் ஹசனலியின் நாமத்திற்கு அகௌரவத்தை ஏற்படுத்த விளைகின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் ஹசனலி மோதலில் ஹசனலி இதற்கு முன்பு எங்கும் அமைச்சர் ஹக்கீம் தன்னை கௌரவிக்கவில்லை எனக் குறிப்பிடாத போது இவ்வாறான கருத்துக்களைப் பரப்புவது காலத்திற்கு பொருத்தமானதல்ல.அஷ்ரபின் மரணத்தின் பிற்பாடு மு.காவின் செயலாளராக யாரை நியமிப்பதென மு.காவின் உயர்பீடம் கூடிய போது ஹசனலி முன் மொழிய பசீர் சேகுதாவூதே முதலில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை ஏற்றுக்கொள்ளாத மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் அமைச்சர் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ளனர்.

இதற்குப் பிறகே ஹசனலிக்கு மு.காவின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.எனக்கு கிடைத்த உள் வீட்டுத் தகவலின் படி அக் குறித்த உயர் பீடக் கூட்டத்திக்கு தனக்கு செயலாளர் பதவி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையிலேயே ஹசனலி சென்றுள்ளதோடு ஹசனலியை செயலாளராக்கவே அதிகமானவர்கள் விரும்பியுள்ளனர்.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் காதினுள் பசீர் செகுதாவூதை செயலாளராக முன் மொழியக் கூறியுள்ளார்.ஹசனலியும் வேறு வழியில்லாமலேயே பசீர் சேகுதாவூதின் பெயரை முன் மொழிய நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.இதில் பொதிந்துள்ள சூட்சுமங்களை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியை மு.காவின் செயலாளராக நியமிக்க அந் நேரத்தில் கூட விரும்பிருக்கவில்லை என்பதே இங்கு பிரதானமாக சுட்டிக் காட்ட விரும்பும் விடயமாகும்.அன்று பஸீர் சேகுதாவூத் செயலாளராக தெரிவாகிருந்தால் இன்று மு.கா என்ற கட்சியின் நிலையை சற்றேனும் ஊகிக்க முடியாதுள்ளது.

மு.காவிலுள்ள பலரும் அமைச்சர் ஹக்கீமிற்கு சற்று பணிந்து சென்றாலும் ஹசனலி அவ்வாறு செயற்படக்கூடியவரல்ல.பல சந்தர்ப்பங்களில் அமைச்சர் ஹக்கீமின் பேச்சை மீறி செயற்பட்டதான கதைகளுமுண்டு.கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவை தனித்து போட்டியிடச் செய்ய வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தார்.மு.கா தனித்து களமிறங்கியதன்  காரணமாகவே கிழக்கு முஸ்லிம் சமூகம் முதலமைச்சுக் கனவை நனவாக்கியதென்றாலும் தவறில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.காவை மைத்திரிக்கு ஆதரவளிக்க செய்ய ஹசனலி அமைச்சர் ஹக்கீமிற்கு கடும் அழுத்தங்களை வழங்கிருந்தார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் ஹக்கீமின் முடிவிற்கிணங்காது சில நாட்கள் ஓடி ஒழித்து விளையாடியதான கதைகளுமுண்டு.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹசனலி தனது ஆதரவுப் படைகளையும் திரட்டி அமைச்சர் ஹக்கீமிடம் மிரட்டல் பாணியைக் கடைப்பிடித்து பலதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவ்வாறு ஹசனலி தனது பாதையில் தொடர்ந்து பயணிப்பது அமைச்சர் ஹக்கீமிற்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளதோடு ஹசனலியை பலமிக்க நபாராக மாற்றவும் வாய்ப்புள்ளது.அமைச்சர் ஹக்கீமிற்கும் ஹசனலிக்குமிடையிலான பிரச்சினைகள் மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் கடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிதாக தோற்றம் பெற்ற தேசிய அரசில் ஹசனலிக்கு ஐ.தே.கவிடமிருந்து மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது.அவ் அரசில் ஹசனலிக்கு இராஜங்க அமைச்சு கிடைக்கப்பெற்ற போதும் அவ் வழங்கப்பட்ட நாளன்று தனக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்படப் போகிறதென ஹசனலிக்கோ அமைச்சர் ஹக்கீமிற்கோ தெரியாமை இதனை இன்னும் தெளிவாக்குகிறது.இதுவே அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் மீது ஒரு கண் வைத்த பிரதான சந்தர்ப்பமாகவும் கூறப்படுகிறது.ஹசனலிக்கு வைக்கப்பட்ட ஆப்பு இவைகளின் விளைவுகளினாலும் இருக்கலாம்.

இப்படிச் சென்று கொண்டிருக்கையில் மு.காவின் கண்டி பேராளர் மாநாட்டில் வைத்து ஹசனலியின் பதவிகள் ஆறு துண்டுகளாக்கப்பட்டு அறுவர் கையில் வழங்கப்பட்டது.கண்டியில் இடம்பெற்ற மு.காவின் பேராளர் மாநாட்டில் ஹசனலிக்கு செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும் விழித்துக் கொண்டிருக்கும் போதே விழியைத் தோண்டிச் சென்ற கதையாட்டம் அவருடைய அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டிருந்தன.ஒரு செயலாளரின் முக்கிய அதிகாரங்களான தேர்தல் ஆணையாளருடன் தொடர்பைப் பேணல்,பாராளுமன்ற செயலாளருடன் தொடர்பைப் பேணல் ஆகியன உயர் பீட செயலாளருக்கு வழங்கப்படிருந்தன.தேர்தல் ஆணையாளரும் மு.காவின் செயலாளர் என்ற வகையில் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பிற்கு மு.காவின்  உயர் பீட செயலாளராக தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ.காதரிற்கே அனுப்பியுள்ளார்.தேர்தல் ஆணையாளரே ஹசனலியை செயலாளர் அல்ல எனக் குறிப்பிட்டு விட்டார்.கடந்த கண்டி பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து ஹசனலியின் பதவிகள் குறைக்கப்பட்டு விட்டது என்ற சல சலப்புக்கள் தோன்றிய போது தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மு.காவின் பொதுச் செயலாளர் பதவியில் எந்தவொரு மாற்றமும் நடைபெறவில்லை என ஊடக அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டிருந்தார்.குறித்த உயர் பீட கூட்டத்தில் மாற்றப்பட்ட கட்சியின் யாப்பை வாசித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலைகளை வைத்துப் பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் பொதுச் செயலாளர் பதவியில் எந்தவொரு மாற்றமும் நடைபெறவில்லை என்றது சிறிதேனும் சந்தேகத்திற்கிடமின்றிய பொய்யாகும்.இவர் அவசரப்பட்டு அறிக்கை விட்டதால் பின்னர் நடக்கப்போவதை அறியாமல் சொன்னாரோ தெரியவில்லை.

இது தொடர்பில் கேள்வி எழுப்புபவர்களிடம் ஹசனலிக்கு வயது சென்றுவிட்டதாகவும் அவரது சிரமங்களை குறைக்குமுகமாவே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மு.காவின் முக்கிய புள்ளிகள் சிலர் கூறித் திரிகின்றனர்.ஹசனலிக்கு சிரமமாக இருந்தால் அவர் தனது இயலாமையைக் குறிப்பிட்டு அவராக விலக வேண்டுமே தவிர அவரின் நலனுக்காவே இன்னுமொருவர் இதைச் செய்தோமென அவர் சிறிதேனும் பொருந்திக்கொள்ளாத ஒன்றைக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது.இன்னும் சிலர் அமைச்சர் ஹக்கீமின் இச் செயலுக்கு அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடைக்காமல் பலரிடையே பகிரப்பட்டுள்ளது என நியாயம் கற்பிக்கின்றனர்.அப்படிப் பார்க்கப் போனால் மு.காவின் தலைவருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குமிடையில் பாரிய வேறு பாடில்லை.அந்தளவு தலைவரிடம் அதிகாரங்கள் மிகைத்துக் காணப்படுகிறன.செயலாளரின் அதிகாரங்களைக் குறைப்பதை விட தலைவரின் அதிகாரங்களை குறைக்க முதலில் அக்கரை கொள்ள வேண்டும்.இருப்பினும்,மு.காவின் செயலாளரிடம் அதிகாரங்கள் ஒன்றும் குவிந்து கிடைக்கவில்லை.ஒரு செயலாளருக்குரிய அதிக்காரங்கள் மாத்திரமே அவரிடமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மு.காவின் யாப்பு மாற்றம் தொடர்பான உயர்பீடக் கூட்டத்தில் யாப்பு மாற்றங்கள் பற்றி வாசிக்கப்பட்ட போது ஆறு மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் போது சில சல சலப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு அதனைச் சமாளிக்க அவ் மாற்றப்பட்ட யாப்பை ஆங்கிலத்தில் வாசித்ததான கதைகளும் உலா வருகின்றன.இவ் ஆறு செயலாளர்களில் ஒருவர் தான் உயர் பீட செயலாளரென குறிக்கப்பட்டிருந்தது.இதன் பின்பு இவ் யாப்பு மாற்றம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் உயர் பீட செயலாளரும் கட்சியின் செயலாளரும் என்ற இரு பதவிகள் மன்சூர் ஏ.காதருக்கு குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் மொஹமத் ஹசனலியைத் தொடர்பு கொண்டு தொடர்பில் வினவியுள்ளார்.ஹசனலி இவ்வாறானதொரு யாப்பு மாற்றம் நிகழவில்லை என்றாதோடு தானே மு.காவின் செயலாளரென பதிலளித்துள்ளார்.ஒரு கட்சியின் செயலாளரை மாற்றும் போது முன்பு இருந்த செயலாளருடன்  முரண்படாதவாறு சுமுகமான மாற்றமிருக்க வேண்டும்.அல்லது அவரை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.அங்கு ஹசனலியை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் இடம்பெறவுமில்லை சுமுகமான மாற்றம் நடைபெறவுமில்லை.

ஹசனலியின் பதவிக் குறைப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிக்குள் சில சல சலப்புக்கள் தோன்றியுள்ள போதும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டறிக்கையில் அது தொடர்பான விடயங்கள் எதனையும் உள்ளடக்காது அமைச்சர் ஹக்கீமின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையாளருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்குமிடையில் எதுவித தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த கூட்டறிக்கையில் இது தொடர்பான சர்ச்சைகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் குறித்த செயலாளர் மாற்றம் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளதாம்.இது தொடர்பில் தெளிவு படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மு.காவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஒரு பிரதியை ஹசனலிக்கும் வழங்குமாறு பிரதி இடப்பட்டுள்ளது.இப் பிரதி ஹசனலியின் கையைச் சென்றடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சம்மாந்துறையில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் மு.காவின் செயலாளர் பதவி அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மறை முகமாக ஹசனலி பதவியை (தேசியப்பட்டியலை) விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.ஹசனலி அமைச்சர் ஹக்கீமுடனான முறுகலுக்கு வெளிப்படையாக தனது பதவி குறைக்கப்பட்டதை தூக்கிக் காட்டுகின்றார்.இதில் எது உண்மை என்பதற்கு இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கடைப்பிடித்து வரும் மௌனத்தை கலைக்கும் போது மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.ஹசனலி செயலாளர் என்ற பதவியிலுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு தேசியப்பட்டியல் தர வேண்டுமென அச்சுறுத்துவதாக கூறுகின்றனர்.இத் தேசியப்பட்டியல் விவகாரத்தை கட்சியின் உயர் பீடத்தைக் கூட்டி அனைவருடனும் கலந்துரையாடி முடிவெடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் சிறிதேனும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.இவ் விடயத்தை அமைச்சர் ஹக்கீம் தனித்துக் கையாள முயற்சிக்கும் போதே இத்தனை பிரச்சினைகள் எழுகின்றன.ஹசனலி அமைச்சர் ஹக்கீமுடன் செயலாளர் பதவியை வைத்து மிரட்டினால் அதனை அமைச்சர் ஹக்கீம் பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்குவதேன்.அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்தாமல் அது வெளி வர வாய்ப்புமில்லை.எனவே,இது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.

 

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாத போது தனது செயலாளர் பதவி மூலம் மு.கா என்ற கட்சியை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.இரண்டாம் தேசியப்பட்டியலை பகிர முன் இச் சவாலை எதிர்கொள்வதற்கு மு.கா தலைமை தயாராக இருக்க வேண்டும்.தேசியப் பட்டியல் பிரச்சினையால் அ.இ.ம.கா நீதி மன்றில் நிற்பது யாவரும் அறிந்ததே.இந்த வகையில் சிந்திக்கும் போது தேசியப் பட்டியலில் குறிவைத்துள்ளதாலும் ஹசனலியின் அதிகாரங்களை குறைத்ததை சரி எனலாம்.இதனைத் தொடர்ந்தெழுகின்ற வினா ஹசனலி இந்த வகையில் செயற்படுவாரா என்பதாகும்.மேலுள்ள அனைத்து ஊக அடிப்படையிலான குற்றச் சாட்டுகளாகும்.இதற்கு முன்பு இடம்பெற்ற சில விடயங்களை ஆராய்வதன் மூலம் சிறந்த பதிலையும் பெற்றுக் கொள்ள முடியும்.இதுவரையில் ஹசனலி பதவி ஆசை கொண்டு மு.காவிற்கு எதிராக செயற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தையேனும் மு.காவினரால் குற்றம் சாட்டப்ட்டதை அறியக்கிடைக்கவில்லை.இப்படியானவரை இந்த வகையில் எடை போடவும் முடியாது.

 

இந்த வகையில் பிரச்சினை ஹசனலிக்கும் ஹக்கீமிற்குமிடையில் விஸ்வரூபம் எடுத்த போது மு.காவின் தேசிய மாநாட்டில் இரண்டு மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை மு.காவின் தலைமைக்கு எதிராக சதி செய்ததால் மு.காவிலிருந்து நீக்கியுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் கூறி இருந்தார்.இவர் குறிப்பிட்ட சதி என்பது அந் நேரத்தில் ஹசனலி அணியினர் ஒரு கடிதத்தில் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர்.இதனையே அவர் சதி எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.அக் கடிதம் மு.காவின் அவ் உயர்பீடக் கூட்டத்தில் நடைபெறாத சிலவை நடை பெற்றதாகவும்,மறைக்கப்பட்ட சிலதை குறிப்பிட்டும் மு.காவின் தலைவருக்கு அனுப்பவே கையொப்பம் வாங்கப்பட்டிருந்தது.இதனை சதி எனக் குறிப்பிட முடியாது.இருப்பினும் இக் கடிதம் அமைச்சர் ஹக்கீமிற்கு அனுப்பப்பட்டு அவர் இதற்கு எதுவித பதிலையும் வழங்காத போது அது தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் நியமனத்தை கேள்விக்குட்படுத்தும்.அமைச்சர் ஹக்கீம் அவசரப்பட்டு இவர்கள் இருவரையும் நீக்கி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.தற்போது இவர்களை நீக்கியமை தொடர்பில் உயர்பீடக் கூட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முதல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு விடுமுறை நாட்களையும் இரண்டாம் ஒத்தி வைப்புக்கு கிழக்கு மாகாண சபை அமர்வையும் காட்டியுள்ளனர்.ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முன்பு இடம்,காலம் என்பன ஆராயப்படல் வேண்டும்.இவைகள் ஆராயப்பட்டிருந்தால் இந்த பிரச்சினைகள் எழுந்திருக்காது.இவ் ஒத்தி வைப்புக்கள் மக்களை ஏமாற்றுவததாக அமைய வேண்டும் அல்லது சிறந்த முகாமைத்துவம் இல்லை என்பதை எடுத்துக் கூறுகிறது.அமைச்சர் ஹக்கீமிற்கு இவர்களை நீக்கியதற்கான காரணங்களை கூற முடியாமல் இப்படி காலம் தாழ்த்துகிறார்களோ தெரியவில்லை.

 

அமைச்சர் ஹக்கீம் அணியினர் ஹசனலி அணியினர் கையொப்பம் வாங்கும் விடயங்களுக்கு எதிரான ஒரு கடிதத்தில் கையொப்பம் வாங்கி வருவதாக அறிய முடிகிறது.உயர்பீட உறுப்பினர்களில் அதிகமானவர்கள் அமைச்சர் ஹக்கீமிற்கு ஆதரவாக உள்ளதால் ஹசனலியினால் அமைச்சர் ஹக்கீமை வெற்றி கொள்ள முடியாது.எனினும்,மு.காவின் எதிரிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றார்கள்.ஹசனலியின் பின்னால் மு.காவின் முப்பது உயர்பீட உறுப்பினர்கள் உள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இது மு.காவிற்கு அவ்வளவு சிறந்ததல்ல.ஹசனலியைப் பொறுத்தமட்டில் கட்சியின் உள் விவகாரங்கள் நன்கு அறிந்தவர்.இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.எதிர்காலங்களில் தொகுதி வாரித் தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று முஸ்லிகளிடையே பெரிதும் தாக்கம் செலுத்தி வரும் இரு பெரும் கட்சித் தலைமைகளால் தங்களது தலைமைத்துவங்களை பாதுகாப்பது மிகவும் சிரமமானது.இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி ஹசனலி அணியினர் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கூட்டை உருவாக்குவதற்கு முயன்று வருவதாக அறிய முடிகிறது.வெகு விரைவில் ஹசனலி அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக பகிரங்க கூட்டங்களில் கதைப்பதற்கு தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.

 

ஹசனலி அமைச்சர் ஹக்கீமை அறிக்கைகள் மூலம் சீண்டி வருகின்ற போதும் அமைச்சர் ஹக்கீம் ஹசனலியை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பல தூதுகள் ஹசனலியை சென்றடைந்துள்ளன.இருப்பினும் ஹசனலி இவைகளை புறக்கணித்துள்ளதாகவே அறிய முடிகிறது.ஹசனலியை தான் சந்திக்க விரும்புகின்ற போதும் அவரைச் சூழ உள்ளவர்கள் விடுகிறார்களில்லை என அமைச்சர் ஹக்கீம் கூறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இப்படி பிரச்சினை முற்றி சந்தைக்கு வந்த பிறகு இருவருக்குமிடையிலான சமரச முயற்சிகள் அவ்வளவு இலகுவில் கை கூடப் போவதில்லை.செயலாளருக்கான முற்று முழுதான அதிகாரங்களின்றி ஹசனலி மு.க பக்கம் தலை வைத்தும் தூங்க மாட்டார்.இத்தனை அடி பிடியின் பிறகு அவருக்கு மீண்டும் பலமிக்க செயலாளர் பதவியை வழங்குவது மிகவும் ஆபத்தானதும் அமைச்சர் ஹக்கீம் ஹசனலியிடம் தோற்றுவிட்டதை தானே கூவித் திருவதாகவும் ஆக்கிவிடும்.இவைகளை வைத்து சிந்தித்தால் இவர்கள் இருவர்களும் மீள ஒன்றிணைவது சாத்தியமானதல்ல.

 

எத்தனையோ சமூகப் பிரச்சினைகளில் மு.கா தலைமை மு.காவை தவறாக வழி நடாத்திய போதும் அவரோடு ஒட்டிருந்த ஹசனலி தனக்கு ஒன்று என்றதும் துள்ளிக் குதிப்பதே அனைத்தையும் பூச்சியத்தால் பெருக்கிய பெறுமானத்தை வழங்குகிறது.

 

குறிப்பு: இக் கட்டுரை நேற்று திங்கள் கிழமை 02-05-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *