இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை இழந்து செல்லும் சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதான தொனியில் கருத்து வெளியிட்டமை முதல் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை தொடர்ந்தும் சிதைப்பது மட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழிக்கும் பாரிய பணியைச் செய்யும் செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.