யாழ். மாவட்டத்தின் கல்வி செயற்பாடுகள் தவிர ஏனைய அனைத்து விடயங்களுக்கும் விடுக்கப்பட்ட தற்காலிகத் தடை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் தெரிவித்தார்.
சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் பிரகாரம், அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் யாவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முழுமையாக செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
கல்வியை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 535 பேர் கொரோனா தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் நேற்று (16) ஒரு COVID மரணம் பதிவாகியுள்ளது. சாவகச்சேரியை சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் 14 ஆவது இறப்பாகவும் வட மாகாணத்தில் 21 ஆவது இறப்பாகவும் இது பதிவாகியுள்ளது.