முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதாரப் பெறுமதியை மக்களிடம் பிரபல்ய படுத்துவதற்கான ´வாழ்க்கைக்கான தோட்டம்´ தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட மட்ட ஆரம்ப நிகழ்வு இன்று (17) காலை 9 மணியளவில் மன்னார் முருங்கன் கமநல சேவைகள் நிலையத்தில் இடம் பெற்றது.
கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அன்ராணி மெரின் குமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரன்லி டி மேல் , நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச் செல்வம் பரஞ்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 13 ஆயிரம் முருங்கை மரக் கன்றுகளை இலவசமாக வழங்கும் குறித்த நிகழ்வில் 400 முருங்கை மரக் கன்றுகள் முருங்கன் கமநல பிரிவு பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதாரப் பெறுமதியை மக்களிடம் பிரபல்ய படுத்துவதற்கான வாழ்க்கைக்கான தோட்டம் என்னும் தேசிய வேலைத் திட்டத்திற்காக புது வருடத்தில் தலையில் எண்ணெய் பூசும் சுபநேரத்தில் வைபவ ரீதியாக குறித்த தேசிய வேலைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சு, விவசாய கமநல அபிவிருத்தி திணைக்களம் , கல்வி அமைச்சு ஆகியவை இணைந்து குறித்த திட்டத்தை அமுல் படுத்தும் நிறுவனங்களாக செயல் படுவதுடன் குறித்த திட்டம் விவசாய அமைச்சர் சசிந்திர ராஜபக்ச அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.
விகாரை மற்றும் மத ஸ்தலங்களில் இலவசமாக முருங்கை மரக்கன்றுகள் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.