ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதில் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் அரசாங்கத்தின் சூழ்ச்சியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பங்குத்தாரராக இருக்கிறாரெனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று (08) கூடிய பாராளுமன்ற அமர்வில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கொலைகாரரைப் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு அனுமதியளித்திருக்கும் சபாநாயகர் ஏன் ரஞ்சனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கு இத்தனை அவசரப் படுகிறாரெனவும், இருவருக்கும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டிய சபாநயாகர் ஏன் வெவ்வேறு விதமாக நடந்துகொள்வதாகவும் சஜித் குற்றஞ்சுமத்தினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக உயிர்நீதிமன்றத்துக்கு செல்ல ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உரிமையுள்ளதாகவும், எனவே, இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் ரஞ்சன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்ற முடிவை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
ரஞ்சனை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறதாகவும், கம்பஹா மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது, மக்கள் ஆணைக்கு எதிரான செயற்பாடனெவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரஞ்சன் இருக்க வேண்டுமென உயிர்நீதிமன்றம் ஒருவேளை தீர்ப்பு வழங்கினால், சபாநாயகர் என்ன செய்வாரெனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் கடிதமொன்றின் ஊடாக தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் எனவும் சஜித் கேட்டுக்கொண்டார்.
ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் எடுத்திருக்கும் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானதோடு, தவறான தீர்மானமெனவும் தெரிவித்ததோடு, ரஞ்சன் இந்நாட்டின் பிரஜை என்றடிப்படையில், அவரது சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.