Breaking
Sun. Nov 24th, 2024

தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த பழைய சட்டத்தை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றதாலேயே இந்த திருத்தத்தை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட மத்திய குழுவினருடனான  கலந்துரையாடல், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில், நேற்று (04) கிண்ணியாவில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத்துடன் ஏற்கனவே இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்றும் இருந்தது. அதில் எவ்வாறு எண்ணெய்களை கலந்து அதாவது, பாம் ஒயிலை தேங்காய் எண்ணெய்யுடன் 25 வீதம் கலக்க முடியும் என்றும், அதற்கான அனுமதியையும் அந்த சட்டம் கொண்டிருந்தது. அந்த அனுமதியை பயன்படுத்தி கடந்த காலங்களில், 25 சதவீதத்துக்கு பதிலாக 50 சதவீதம், 75 சதவீதம் எனக் கலந்து மோசடி செய்தார்கள்.

எனவேதான், குறிப்பிட்ட தேங்காய் எண்ணெய்யில் என்ன கலந்திருக்கின்றார்கள்? எத்தனை சதவீதம் கலந்திருக்கின்றார்கள்? யார் இதனை செய்திருக்கிறார்கள்? என்பதை எழுத்துருவிலே அந்தந்த போத்தல்களிலே ஒட்ட வேண்டும் என்று கட்டாயமாக்கி, ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தேன். இதனை நல்ல நோக்கத்திலேயே மேற்கொண்டேன். திருடர்களை பிடிப்பதற்காகவும், பாவனையாளர் தாம் பயன்படுத்தும் பொருட்களின் உள்ளடக்கம் என்னவென்று அறிந்துகொள்வதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இவ்வாறான நல்ல நோக்கத்துடனான சட்டத்தை நான் கொண்டு வந்ததினாலேயே, தற்போது நடைபெற்றுள்ள அநியாயம் நிகழ்ந்ததாக கூறுகின்றனர். சிங்கராஜவில் இடம்பெற்று வரும் காடழிப்பு, கோடிக்கணக்கில் இடம்பெற்றுள்ள சீனி மோசடி ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் நோக்கில், என்னை தொடர்புபடுத்தி இந்தப் புரளியை கிளப்பியுள்ளர்கள்.

எண்ணெய் இறக்குமதியின் போது, சுங்கத் திணைக்களம் அவற்றை பரிசீலிக்க வேண்டும். SLSI இலங்கை தரக் கட்டளை நிறுவனம் அதனை ஆராய வேண்டும். அதேபோன்று உணவுத் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆய்வு மையம் ஆகிய நிறுவனங்கள் இதனை கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் என்ற சட்டமும் இருக்கின்றது.

இவற்றில் ஒன்றையும் செய்யாமல் அவர்களுக்கு ஏற்றாற்போல இறக்குமதி செய்துவிட்டு, அவர்களின் நண்பர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாரிய தொகையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு, மொத்தமாக கொள்ளையடிக்க எடுத்த முயற்சி அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக புற்றுநோயை ஏற்படுத்தும் சதியும் தெரியவந்துள்ளது.  

“இந்த நாட்டில் எது நடந்தாலும் ரிஷாட் பதியுதீன் தான் காரணம்” என்று சமூக ஊடகங்களில் பொய்களை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில், இந்த விவகாரத்தையும் என்னுடன் சம்பந்தப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பொய்யான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், பெரும்பான்மை சமூகமும் இவற்றின் உண்மைத்தன்மையை தற்போது உணரத் தொடங்கியிருகின்றார்கள்”  என்றார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *