சிகரட் பாவனை மீதுள்ள கவர்ச்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று ‘இன்னும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ கூறி பல செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
அதாவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் சிகரட்டை இன்னமும் புகைப்போர் முட்டாள்கள் எனும் கருத்தின் வெளிப்பாடே இச்செயற்றிட்டம். புகைத்தலின் மீதுள்ள கவர்ச்சியைக் குறைப்பதற்காகவும், எதிர்கால சந்ததியினர் புகைப்பழக்கத்திற்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஏப்ரல் முதலாம் திகதியன்று ‘இன்னமும் சிகரட் புகைப்போரின் தினம்’ எனும் காலத்திற்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே இச்செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது புகைத்தலினால் வருடாந்தம் 07மில்லியன் பேர் உலகளாவிய ரீதியில் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். இலங்கையில் தினமும் 60 பேர் மரணிப்பதற்கு புகைத்தல் காரணமாக அமைகின்றது, தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மை காரணியாக புகைப்பழக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிகரட் புகைக்கும் 04 பேரில் ஒருவருக்கு பாலியல் பலவீனம் ஏற்படுகின்றது.
சிகரட் புகைப்போர் தனது இளமைப் பருவத்திலேயே முதிர்ந்த தோற்றத்தை அடைந்து தனது வசீகரமான தோற்றத்தை இழக்கின்றார். முகம் அவலட்சணமடைந்து, உதடு கருமையடைந்து, வெளிறி, வாயில் துர்நாற்றம் வீசும் ஒரு விகாரமடைந்தவராக மாற்றமடைகின்றார். இது மட்டுமின்றி எதற்கும் சிகரட் தேவை என்கின்ற நிலைமையை அடைந்து தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட சிகரட் இல்லாமல் முடியாது தடுமாறுகின்றனர்.
சிகரட்டுக்கு அடிமையாகி சுதந்திரமற்ற, மட்டுப்பட்ட வாழ்க்கையை தழுவுகின்றனர். இந்தளவு பாதிப்புக்கள் இருந்தும் பெருமளவிலான பணத்தை சிகரட்டிற்காக செலவழித்து தனக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திக் கொள்வோர்களின் நிைலமையை எடுத்துக் காட்டவும், எதிர்கால சந்ததியினர் சிகரட் புகைப்பது முட்டாள்களின் செயல் என கருத வேண்டும் என்பதற்காகவும் எதிர்கால தலைமுறையினர் புகைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.