நுண்நிதி கடனை நிறுத்த கோரி, வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், நாடு பூராகவும் 28 இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும், நிம்மதியை இழந்து, நித்திரையை இழந்து தவிக்கும் தமது பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, நுண்நிதி கடனை நிறுத்த கோரி, முல்லைத்தீவிலும் இன்று (30) கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.