Breaking
Sat. Nov 23rd, 2024

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை விவசாயம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இயற்கை விவசாயம் என்பது விவசாயச் சூழலை உயிருள்ள ஒர் தொகுதியாகக் கருதி, சூழலுடன் இசைவான முறையில் இயற்கைச் சாகுபடிமுறைகளை அடிப்டையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாய முறையாகும். 

பண்ணையில் ஆரோக்கியமானதும் உயிர் வாழ்கின்றதுமான வளமிக்க மண்ணை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்வது இவ் விவசாயத்தின் அடிப்படைத் தத்துவமாக உள்ளது. 

இயற்கை விவசாயத்தினை மேற்கொள்வதன் மூலம் நோய் நொடிகளற்ற வாழ்வைக் கட்டியெழுப்ப முடியும். சேதன விவசாயம் என அழைக்கப்படும் இயற்கை விவசாயத்தில் பயிர் அறுவடைக்கு முன்போ,பின்போ எந்தவொரு இரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அவ்வாறான விவசாயம் மூலம் உருவாகும் விளைபொருட்களை நுகர்வதால் மானுட வாழ்கைக்குத் அவை தீங்கு பயப்பதில்லை என்பது முக்கியமானது. 

ஆனால், இரசாயன விவசாயத்தில் இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றைக் கட்டுப்பாடற்றளவில் பாவித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களைப் பாவிப்பதனால் புற்றுநோய், நரம்பியல் சம்பந்தமான நோய்கள், உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவடைதல் ஆகியன ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. 

இயற்கை விவசாயம் மண்ணின் வளத்தைப் பேணி, சூழல் மாசடைவதைத் தடுக்கின்றது. இரசாயன விவசாயத்தில் இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது மண்ணில் உள்ள பயன்தரும் நுண்ணுயிர்கள் அழிவடைவதுடன், மண்ணில் இரசாயன உப்புக்கள் சேர்வதனால் மண்ணின் வளமானதுகுன்றிப் போகின்றது. அத்துடன் நிலத்தடிநீரும், அச்சூழலில் வாழும் நீர்வாழ் உயிரினங்களும், பறவைகள் மற்றும் விலங்குகள் என்பனவும் பாதிப்படைகின்றன. 

முற்றாக இயற்கை விவசாயத்தை எடுத்துக்கொண்டோமானால் இவ் விவசாயத்தில் இயற்கை இடு பொருட்களைப் பயன்படுத்துவதனால் மேம்பட்ட மண்ணின் அமைப்பு, பயன் தரும் நுண்ணுயிர்களின் பெருக்கம்,மண்புழுக்களின் எண்ணிக்கைப் பெருக்கம் ஆகியவற்றால் மண்ணானது செழிப்பு நிலையை அடைகின்றது. 

இவ் விவசாயம் பாரம்பரிய விதைகளின் பாவனையை ஊக்குவிப்பது மற்றுமொரு பயன்தரும் முயற்சியாகும். எமது பாரம்பரிய விதையினங்கள் இயற்கையாகவே நோய்த் தாக்கத்தினை எதிர்க்கும் தன்மை கொண்டவை,சுவைமிகுந்தவை,சத்துக்கள் நிறைந்தவை,எமது பிரதேச காலநிலைக்குப் பொருத்தமானவை. 

மாறாக, இரசாயன விவசாயம் கலப்பின விதையினங்களின் பிரயோகத்தினை ஊக்கப்படுத்துகின்றது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள், மரக்கறிகள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அவற்றின் தோற்றம், சுவை ஆகியவைமிக்க வேறுபாடானவையாகும். 

இத்தகைய நேர்த்தன்மைகள் வாய்க்கப் பெற்ற இயற்கை விவசாயத்தின்பால் யாழ்ப்பாணத்திலும் தற்போது அதீத கரிசனையும் ஆர்வமும் எழுந்துள்ளது.  

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அ.கமலேஸ்வரன் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயப் பண்ணை பற்றிக் குறிப்பிடுகையில், 

‘நான் போர்க் காலகட்டங்களில் இந்தியாவில் வசித்துவந்தேன். அவ்வேளை தமிழகத்தில் இயற்கை விவசாய ஆய்வாளரும் இயற்கை விவசாயச் செயற்பாட்டாளருமான கோ.நம்மாழ்வாரின் கருத்துக்கள் இயற்கை விவசாயத்தில் பெரிதும் மாற்றத்தை எற்படுத்தியது.  

அவர் கூறிய’இந்தத் தலைமுறைதான் அடுத்ததலை முறையின் மரணத்தை அருகில் இருந்து பார்க்கப்போகின்றது’ என்ற கூற்று என்னை அதிகம் பாதித்தது. இதன் பின்னரான காலகட்டங்களில் எனக்குச் சேதன விவசாயம் பற்றிய ஆர்வம் அதிகரித்தது’ 

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்ற வாசகத்திற்கிணங்க யாழ்.மாவட்ட சேதன விவசாயச் சங்கத்தை 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25இற்கும் குறைவான அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பித்தோம்.  https://7bd637599bef51b8c61a8cad391d87f9.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html

ஆரம்பத்தில் இது சுயாதீனமாக, ஆர்வம் கொண்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. சுயாதீனமாகச் செயற்பட்டவர்களை ஒன்று சேர்த்து ஒர் சங்கமாக உருவாக்கக் காரணம், ஒருபதிவின் கீழ் சங்கமாக இயங்கும் போது மக்கள் மத்தியில் அதுசார்ந்த நம்பகத்தன்மை கட்டியெழுப்பப்படும் என்பதாகும். தற்சமயம் 60இற்கும் அதிகமானோர் இச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்’ 

‘எமதுநோக்கம் காலநிலை மாற்றத்தைக் கருத்திற்கொண்டு, நஞ்சற்ற உணவு உற்பத்திகளைச் சமூகத்திற்கு வழங்குவதாகும். இதனால் நமக்கு அதிகளவில் இலாபம் கிடைக்காவிட்டாலும் தன்னிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கின்றது’ 

‘சமூகத்தில் சிலர் தாம் மேற்கொள்ளும் செயற்கை விவசாயத்திற்கு இயற்கை விவசாயம் என்ற முகத்தைச் சூட்டிக் கொண்டுள்ளமை எமது நோக்கங்களையும் நாம் கொண்டுள்ள நம்பகத்தன்மையையும் பாதிப்பதாக அமைகிறது’ எனவும் தெரிவித்தார். 

‘விவசாயம் என்பது மனித உயிர்களோடு சம்பந்தப்பட்டது வணிகத்திற்காக விவசாயக் கோட்பாடுகளைக் கைவிடுவது தவறு. எவரிற்கும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்பது விருப்பமாக அமையாவிட்டாலும், அவர்கள் அவர்களது பொருளாதார ரீதியான நெருக்கடியும் மூலதனத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பதனாலும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்’ 

‘இயற்கை விவசாயத்தில் நாம் பாரம்பரிய விதைகளை உபயோகிக்கின்றோம். இங்கு பாரம்பரிய விதைகள் எனக் குறிப்பிடுவது நாம் செய்யும் விவசாயத்தில் இருந்து பெறும் விதைகளை மறுபடியும் பயன்படுத்தி விவசாயச் செய்கைகளை மேற்கொள்வதாகும்.  

இவ்வாறான பாரம்பரிய விதைகளில் இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் போதும் அவற்றின் மரபணு மாற்றப்படும். இதனை மரபணு மாற்றப்பட்ட விதைகள்,மேம்படுத்தப்பட்ட விதைகள் என்கின்றோம். இன்று செயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருகின்ற நிலங்களில் இயற்கை விவசாயத்தைச் செய்ய முடிவதில்லை. காரணம் செயற்கை விவசாயத்திற்கேற்ப மண் பதப்படுத்தப்பட்டு விட்டது’ எனக் கவலையுடன் கூறினார் கமலேஸ்வரன். 

‘விவசாயத்தால் ஏற்படும் தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற எமக்கே விழிப்புணர்வு வேண்டும். இதற்கு முதற்கட்டப் பணியாக ஒவ்வொருவரும் இயற்கை முறையில் அமைந்த வீட்டுத் தோட்டத்தை அமைப்பது சிறந்தது. இதன் மூலம் வீட்டுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றுக் கொள்வதோடு மேலதிக உற்பத்திகளையும் பெற்றுக் கொள்ளலாம்’ என்பது அவர் முன்வைக்கும் முக்கிய ஆலோசனையாகும். 

யாழ்.மாவட்ட சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் தமது உற்பத்திகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருநெல்வேலி அரசாங்க விவசாயப் பண்ணையிலுள்ள பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சந்தைப் பகுதிக்குக்கொண்டு வந்து சந்தைப்படுத்துவார்கள். 

இச் சந்தைப்படுத்தலானது காலை ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரை நடைபெறும். குடாநாட்டின் பல இடங்களில் இருந்தும் வந்து தமது உற்பத்திகளைச் சேதனவி வசாய உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துகின்றனர். பிரதானமாக, உள்ளுர்த் தேவைகளைக் கருத்திற்கொண்டே உற்பத்திகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.  

‘அநேகமான மக்கள் இவ் உற்பத்திகளை விரும்பிக் கொள்வனவு செய்கின்றனர். இதனால் உற்பத்திகளை அதிக விலைக்கும் விற்பனை செய்வதில்லை. உற்பத்தியாளர்களுக்கு மூன்றிலொரு பங்கு இலாபம்தான் கிடைக்கும். எனினும், உற்பத்தியாளர்கள் சமூகத்திற்கு நஞ்சற்ற உணவை கொடுத்த மனநிறைவு கிடைக்கிறது’ என்று கூறுகிறார் இச் சங்கத்தின் பொருளாளர் எஸ். ரஞ்சித்குமார்.  யாழ்.மாவட்ட சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் அங்கத்தவர்களில் அநேகமானவர்கள் வேறுவேறு துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவர். இவர்கள் பகுதிநேர அளவில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பகுதி நேரத் தொழிலாக அமைவதனால் உற்பத்தியாளர்கள் வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதில்லை இச் சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலர் விவசாயத்தை தனி நிலப் பிரதேசங்களிலும் இன்னும் சிலர் வீடுகளில் வீட்டுத்தோட்ட அளவிலும் மேற்கொள்கின்றனர்.  

கடுகுசிறிதானாலும் காரம் பெரிது என்பதை ஒத்து,அளவிற் குறைந்த எண்ணிக்கையான செயற்பாட்டாளர்களைக் கொண்டிருந்தாலும் யாழ்.மாவட்ட சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் பணிகள் யாழ்.மண்ணில் இயற்கை விவசாயத்தை எதிர்காலத்தில் இன்னமும் வலுப்படுத்தும் என நிச்சயம் நம்பலாம். 

தே.கவினயா

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *