சதொச ஊழியர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து பிரதிவாதிகள் மூவரையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட மொஹமட் சாகீர் ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஆட்சேபனைக்கு உட்படுத்தி பிரதிவாதிகளால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்து மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய, மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.