Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு-

டுபாயின் பிரதி ஆட்சியாளர் ஷெய்க் ஹம்டன் அவர்களின் மறைவு அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஷெய்க் ஹம்டன் அவர்களின் மறைவு குறித்து, அவரது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

“டுபாயின் மறைந்த ஆட்சியாளர் ஷெய்க் ரஷீட் பின் சயீதின் இரண்டாவது புதல்வரான ஷெய்க் ஹம்டன், 1971 ஆம் ஆண்டு டுபாயில் அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இறக்கும் வரை நிதியமைச்சராக பணிபுரிந்தவர்.

மனிதநேயமும் பண்பான உள்ளமும் கொண்ட அவர், வறிய நாடுகளின் தோழனாக இருந்து, அவ்வவ் நாடுகளில் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்திருக்கிறார். அந்தவகையில், நமது நாட்டில் சுனாமி, மற்றும் இயற்கை அழிவுகளில் மக்கள் பாதிக்கபட்ட போதெல்லாம் டுபாய் அரசாங்கத்தின் மூலமும், அவரை தலைவராகக் கொண்ட “மக்தூம் தர்ம நிதியத்தின்” (Charity) மூலமும் எண்ணற்ற உதவிகளை செய்தவர். அதுமாத்திரமின்றி, வீடுகள் இல்லாத இடம்பெயர்ந்த மக்களுக்கு, தனது “மக்தூம் தர்மநிதியத்தின்” மூலம் வீடுகளை அமைத்துக் கொடுத்து, அந்த மக்களின் நல்வாழ்விற்கு வழிவகுத்தவர்.

அதுமாத்திரமின்றி, யுத்தகாலத்திலே பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்தவர்.

இலங்கை அரசுடன் மாத்திரமின்றி, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் இருந்தன. குறிப்பாக, நான் அமைச்சராக இருந்த வேளை, பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நான் விடுத்த கோரிக்கைகளில் அனேகமானவற்றை ஏற்று வடக்கு, கிழக்கு மக்களுக்கு தன்னால் முடிந்தவரை பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.

டுபாய் நாட்டின் வெளிநாட்டு முதலீடுகள் பலவற்றை இலங்கைக்கு கொண்டுவருவதில் இவர் பெரிதும் அக்கறை காட்டினார். டுபாயில் அவரை நான் சந்தித்த காலத்தில், இலங்கை டுபாய் வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பிலும், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் என்னுடன் கலந்துரையாடியதை நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *