தேர்தலில் முதன் முதலில் போட்டியிடுகிறீர்கள். பயம், தயக்கம் இருக்கிறதா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,’பயமா… பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை. முதல் தடவை போட்டியிடுகிறேன் என்பதால் வெற்றிபெற கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்.
வெற்றிக்கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன். என்னை வாழவைத்த மக்கள் என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பிரசாரத்தின்போது நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆயிரம் விளக்கு தி.மு.க.வின் கோட்டை என்று கூறுவதே கேலியாக உள்ளது. அப்படி நினைத்திருந்தால் மு.க.ஸ்டாலின் எதற்கு கொளத்தூருக்கு ஓடினார்? எத்தனை பேர் போட்டியிட்டாலும் நல்லவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.
இந்த தொகுதியை பொறுத்தவரையில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் பிரச்சினை இருக்கிறது. இதை தீர்த்து வைத்தாலே போதும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பொறுப்பாளராக எனது கடமையை சரியாக செய்துள்ளேன். எனவே ஆயிரம் விளக்கு எனது தொகுதியாக இருந்தாலும் அடிக்கடி அங்கும் சென்று மக்களை சந்திப்பேன்