Breaking
Mon. Nov 25th, 2024

சுஐப் எம்.காசிம்-
“நிச்சயமாக நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும், மிகப்பலமான கோட்டை கொத்தளங்களை கட்டி நீங்கள் வாழ்ந்த போதிலும் சரியே.!” (புனித அல் குர்ஆன்). இவ்வாறு வரும் மரணம் கொரோனா தொற்றியதால் வந்து விடக்கூடாது. சுமார் ஒரு வருடங்களாக முஸ்லிம்களுக்கு இருந்த பயம் இதுதான். குளிரூட்டிகளில் வைக்கப்படும், கொளுத்தி எரிக்கப்படும், உறவினர்கள் பார்ப்பது தடுக்கப்படும் இவைகள்தான், முஸ்லிம்களை பயமுறுத்தின.


2020 மார்ச் ஆரம்பத்தில், தொற்றத் தொடங்கிய இந்தக் கொரோனா, இன்று வரை (11) ஐநூறு பேரை பலி எடுத்துள்ளது. எல்லா நாடுகளிலும் நல்லடக்கம் செய்ததைப் போன்று, எமது நாட்டிலும் நடந்திருந்தால், முஸ்லிம்களுக்கு இந்தப் பயம் ஏற்பட்டிருக்காது. இது, முஸ்லிம்களுக்கு மதத்திலிருந்த, ஆத்மீகத்தின் திருப்தி, நம்பிக்கையையே காட்டியது. விஞ்ஞானத்தையும் விஞ்சி, ஆத்மீகத்திலிருக்கும் இந்த சமூகத்தின் நம்பிக்கையை சிலர் அடிப்படைவாதமாகக் காட்டுவதற்கும், இந்த சமூகத்தின் விடாப்பிடி (மதப்பற்று) வழிகோலியிருந்தது. “தோதுவாய்த்தால் தோளுக்கு மேலேயும்  தவளை துள்ளும்” என்பார்களே! அதுதானிது. 
ஈஸ்டர் தாக்குதலும் நடந்திற்று, அரசியலும் சறுக்கிற்று, காத்திருந்தவன் காய் பறிக்காமலா இருப்பான்? இதுதான் கடைசியில் இந்த “உம்மத்தின்” (சமூகம்) ஆத்மீகத்தை அரசியலாக்கியது.

இவ்விடயத்தில் ஒன்று மட்டும் எல்லோருக்கும் உணர்ந்திருக்கும். நல்லடக்கத்தில் நம்பிக்கையுள்ள ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம்கள் இதைத் தூக்கிப்பிடித்தனரே ஏன்? அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்கல்ல, ஆத்மீகத்தைக் காப்பாற்றவே இத்தனையும். நீர்கொழும்பு பலகத்துறையில், முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்டபோது, ஒவ்வொரு முஸ்லிமின் “கல்புக்குள்ளும்” கானல் நீராகிவிடுமோ நமது நம்பிக்கை? என்ற ஏமாற்றம் தொற்றிக்கொண்டது. அன்றிலிருந்து இந்த மார்ச் இரண்டு வரை எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன?இந்தக் கேள்விக்கான கணிப்புக்களில் குரோதத்தில் வெளிவருபவைதான் அதிகம். இதனால்தான், நம்பிக்கையை வெல்வதற்கான இந்த “உம்மத்தின்” தூக்கிப்பிடிப்புக்கள், அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்கானவை எனச் சிலரால் சாயமும் பூசப்படுகின்றது. 
கொரோனாத் தொற்றில் மொத்தமாக மரணித்த ஐநூறு பேரில் 334 முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதாகத்தான் ஒருதலைப்பட்சக் கணிப்பீடுகள் கருதுகின்றன. மேலும் அனுமதி வந்ததிலிருந்து(11) திகதி வரை 40 பேர் நல்லடக்கமும் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறானால்,  ஏனைய சமூகங்களில் 126 பேர்தானா?  யதார்த்தத்தின் கேள்வி இது? இரண்டு கோடி சனத்தொகையில், இருபது இலட்சம் பேர்தானே முஸ்லிம்கள். ஏனைய ஒருகோடியே எண்பது இலட்சத்திலும் 126 பேரையா, கொரோனா காவிக்கொண்டது? இல்லையே, 181ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு, 40 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுதானே கணிதத்துக்குப் பொருந்துகிறது.

ஏறாவூரைச் சேர்ந்த மர்ஹூமா ஹசனத் உம்மா, மர்ஹூம் கலீல் ஆகியோரின் நல்லடக்கத்தில் தொடங்கிய நிம்மதியை குலைக்கும் வகையில், ஒருதலைப்பட்சப் போக்குகள் இருக்கக் கூடாது. இதுதான் யதார்த்தம். 
எதற்காக ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதென்று சிந்திக்கும் எவரும், இதுவரைக்கும் இதில் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை. வரமுடியாதளவில்தான் இதில், சிக்கல்களும் சிக்கியிருந்தன. கடைசியில், சிக்கல்களை தீர்த்து வைத்த சக்திகள் எவை? என்றும் அடையாளம் காண முடியாதிருக்கிறது. மரணித்து மூன்று மணித்தியாலத்துக்குள் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் முஸ்லிம்கள்,  மாதக் கணக்கில் காத்துக்கிடந்தனர். என்ன? அடக்கம் செய்வதற்கா இல்லை, நீதிமன்றத் தீர்ப்புக்காகத்தான். நமது ஜனாஸாக்காள் குளிரூட்டிகளுக்குள் காத்துக்கிடந்தன. நடக்கப்போவது தெரியும் வரைக்கும் இந்த ஜனாஸாக்களின் உறவினர்கள் எப்படிக் கதிகலங்கி, “கல்பு” (உள்ளம்) கொதித்திருப்பர். உறவினர்கள் மட்டுமல்ல முழு “உம்மத்தும்” (சமூகம்) இதனால், மத நம்பிக்கையை நெஞ்சுக்குள் பொத்திப்பிடித்தவாறு, பிரார்த்தனைகளில் இருந்தது.
இப்போது, இந்தச் சமூகத்தின் பிரார்த்தனைகள் பலித்துவிட்டன. இனிமேல், பழிவாங்கும் தீர்மானங்கள் ஜனசாக்களில் இருக்கப்போவதில்லை. இவ்வாறான தீர்மானங்களுக்கு வரும் வகையில், எமது “உம்மத்தின்” பிரதிநிதிகள் நடக்காமலிருக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும். மட்டுமல்ல, எரிக்கப்பட்ட ஜனாஸாக்களும், இறைவனின் ஏட்டில் எழுதப்பட்டவையே, என்ற நம்பிக்கைதான், உறவினரைத் தேற்றியிருக்கும். இனியாவது, நடப்பவற்றில் நிதானத்துடன் செயற்படத் தயாராக வேண்டும். அரசியல் நோக்கிலான ஆத்மீகப் பற்றுக்களைப் புறந்தள்ளி, அடைய வேண்டிய யாத்திரை இலக்குகளுக்கு சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது, இந்த உம்மத்தின் பொறுப்பாகிறது.


அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சமூகங்களதும் மத, கலாசார, அரசியல் உரிமைகளில், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வழிகள், வியூகங்களில் தீர்வு தேடப் புறப்படும் பாதையைத் தெரிவு செய்வதே, எதிர்காலத்துக்கு உகந்தது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *