Breaking
Sun. Nov 24th, 2024

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

பாராளுமன்றில் இன்று (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வாழும் பெண்கள், தமது உரிமைகளை பாதுகாக்க கோஷம் எழுப்புவதையும் அதற்கான பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவதையும் நாம் கண்ணூடாக பார்க்கின்றோம். இதற்கென பெண்கள் சார்ந்த பல்வேறு அமைப்புக்களும் உள்ளன. ஆணோ, பெண்ணோ அவர்களது உரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அந்த நாட்டு அரசுக்கும், பெண்கள் சார்ந்த துறையினருக்கும் இருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இரு சாராரும் தமது உரிமைக்காக போராட வேண்டிய சூழலை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதே என் கருத்து.

அந்தவகையில், இந்த விவாதத்தை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நான் நன்றிகளை தெரிவிக்கின்றேன். எமது நாட்டில் அண்மைக்காலமாக பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளை நாம் காண முடிகின்றது.

நமது நாட்டில், கடந்த காலங்களில் பெண்களுக்கென அமைச்சரவை அந்தஸ்துள்ள மகளிர் விவகார அமைச்சு என்றொன்று தொடர்ந்தேர்ச்சியாக இருந்தது. ஆனால், இந்த அரசாங்கத்தில் அவ்வாறு நியமிக்கப்படாமல், மகளிருக்கென இராஜாங்க அமைச்சு ஒன்றே காணப்படுகின்றது. எனினும், இந்த இராஜாங்க அமைச்சுக்கு பாரிய பொறுப்பு உண்டு. பிரதேச ரீதியிலும், மாவட்ட ரீதியிலும், மாகாண ரீதியிலும், தேசிய ரீதியிலும் செயலகங்களில் பல்வேறு உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை முறையாக பயன்படுத்தி பெண்களின் கல்வி, பொருளாதாரம், எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், தேவையற்ற இம்சைகள் ஆகியவற்றை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களை, திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது.

வெளிநாட்டில் பணிபுரியும் நமது நாட்டுப் பெண்கள் படுகின்ற அவலங்களை அறியமுடிகின்றது. இதனால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே, இவ்வாறன காரணங்களினால், பெண்களை வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்துவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களும் இருக்கின்றன.

நமது நாட்டிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தொழில் செய்யும் பெண்கள், வீதிகளில் பாதை செப்பனிடும் வேலைகளில் குறிப்பாக, தார் ஊற்றும் பணிகளில் ஈடுபடுவதை நான் கண்டிருக்கின்றேன். இவ்வாறான கடினமான வேலைகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டு, கண்ணியமான வேலைகளை வழங்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அத்துடன், பிள்ளைகள் கூட தமது வயோதிபத் தாய்மார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு கஷ்டங்களை நமது கண் முன்னே அனுபவிக்கின்றனர்.

எனது மாவட்டமான மன்னாரில் ஸ்ரான்லின் டி மெல் என்ற பெண் அரச அதிபராக இருக்கின்றார். அதேபோன்று, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த திருமதி. பி.எம். சார்ள்ஸ் வடக்கு மாகாண ஆளுநராக இருக்கின்றார். இந்த நியமனங்களை நாம் கெளரவமாக கருதுகின்றோம். இவ்வாறு நிர்வாகத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

தற்போது, பெண்களின் உடை பற்றி பேசப்படுகின்றது. குறிப்பாக, முகத்தை மூடக்கூடாது எனவும், அது நாட்டுக்கு பாரிய ஆபத்து எனவும் பலவந்தப்படுத்த எண்ணுகின்றார்கள். முகத்தை மூடத்தான் வேண்டுமென நான் இங்கு வலியுறுத்தவில்லை. பெண்களை பொறுத்தவரையில், அவர்களின் ஆடையை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அத்துடன், இன்று சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. இவர்கள் ஆடை அணிந்திருக்கின்றார்களா? என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறு இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், இதற்கு மாற்றமாக, இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக வெறுமனே இவ்வாறன பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். அதுமாத்திரமின்றி, சில எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார்கள்.

அதேபோன்று, திருமணச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென கூறப்படுகின்றது. மாற்றங்கள் என்பது காலத்திற்கு ஏற்ப தேவையான ஒன்றாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அமைச்சரோ, அரசாங்கத்திலிருக்கும் ஒரு சிலரோ இதனை செய்து விட முடியாது.

இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இவற்றை மேற்கொள்ள வேண்டுமெ தவிர, இரவோடு இரவாக இதனை செய்து விட முடியாது. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு செய்ய முடியாது. நபி (ஸல்) பெருமானார் நபியாக வருவதற்கு முன்னர், அந்த நாட்டிலேயே பெண்களை உயிருடன் குழிதோண்டிப் புதைத்தார்கள். அந்தக்காலத்தில் பெண்களுக்கு எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை. பெருமானார், நபியான பின்னர் தான் பெண்களுக்கான மரியாதையையும் கெளரவத்தையும் வழங்கினார்கள்.

”தாயின் காலடியிலேயே தான் சுவர்க்கம் இருக்கின்றது” என்று பெருமானார் கூறினார்கள். கணவன் நிச்சயமாக மனைவியின் கடமையை செய்ய வேண்டும். மனைவியின் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதும், பெருமானாரின் வருகைக்கு பின்னர் சட்டதிட்டங்களாக கொண்டுவரப்பட்டது. அத்துடன், பெண்கள் கல்வி கற்க வேண்டும் எனவும் பெருமானார் வலியுறுத்தினார்கள்.

எனவே, மார்க்கத்தை சரிவர தெரிந்துகொள்ளாதவர்கள், இஸ்லாமியர் மீது வெறுப்புணர்வு கொண்டவர்களுமே தேவையற்ற விடயங்களை பேசித் திரிகின்றார்கள் என்பதை வேதனையுடன் தெரிவிக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *