முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தெமட்டகொட- குப்பியாவத்த மயானத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இழுபறி தொடருமாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரே ஏற்கவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யலாமென, வர்த்தமானியைத் திருத்தி, சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். எனினும், உரிய இடமில்லையெனக் கூறி, சுகாதார பணிப்பாளர், காலத்தைக் கடத்தி வருகின்றார்’ என்றும் மரிக்கார் எம்.பி குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,
சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, பேராசிரியை ஜெனிபர் பெரேராவால் டிசெம்பர் 28ஆம் திகதி, சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதனடிப்படையில், உரிய இடத்தைத் தேடாமல், கடந்த இரண்டு மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் தெமட்டகொட- குப்பியாவத்த மயானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு 2.5 அடி ஆழத்திலேயே நிலக்கீழ் நீர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த மயானம், மருதானை பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, அந்த மயானத்தை வழங்க விருப்பம் தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குக் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.
பேராசிரியை ஜெனிபர் பெரேராவின் அறிக்கையை, இரண்டு மாதங்களாக, மறைத்து வைத்தவர்கள், சடலங்களைப் பலவந்தமாகப் புதைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், அடக்கம் செய்யும் விவகாரத்தில் இழுபறி தொடர்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பும் சுகாதார பணிப்பாளரையே சாரும் என்றார்.