இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு கியூபா மற்றும் எல்சல்வடோர் ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.
நாட்டிற்கு வருகைதந்துள்ள இரு நாடுகளினதும் வைத்திய நிபுணர் குழு நேற்று (29) முற்பகல் ஜனாதிபதியை சந்தித்தது.
கியூபா மற்றும் எல்சல்வடோரின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு முத்தரப்பு இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அவதானம் செலுத்தினார்.
இலங்கை மற்றும் எல்சல்வடோர் ஆகியன சம காலநிலையைக் கொண்ட நாடுகள் எனவும், பெரும்பாலும் இரசாயன உர பாவனையால் இரு நாடுகளிலும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன்போது கியூப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இரசாயன உர பயன்பாடு தவிர்க்கப்பட்டமையால், கியூபாவில் சிறுநீரக நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்ததாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான கியூப தூதுவர் பொலொரென்டினோ பெசிஸ்டா தெரிவித்தார்.
இலங்கையில் சிறுநீரக நோயைத் தடுப்பதற்காக விசேட மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கியூப தூதுவர் இதன்போது தெரிவித்தார்.