Breaking
Sun. Nov 24th, 2024

விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் முஸ்லீம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (13) மாலை இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தமிழ் முஸ்லீம் மக்களினால் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்த பேரணியில் சிலரால் முஸ்லீம்களுக்கு எதிராக வடக்கு கிழக்கினை இணைக்க வேண்டும் என்றும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பன கோரிக்கையாக முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தெரியாமல் முஸ்லீம்களை ஆதரவளிக்க கூறிவிட்டு சிவ பூசையில் கரடி நுழைந்தது போன்று இவ்வாறு பேரணியில் சிலர் புகுந்து கோஷம் இட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கின்றார். இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறுவது புதிதல்ல. வழமையாக ஒன்றினை ஏற்பாடு செய்து விட்டு இவ்வாறு கெடுக்கப்பட்டு விட்டது என கூறுவார். அதாவது மடையனாகி விட்டோம்.படுகுழியில் விழுந்து விட்டோம் என கூறுவது வழமையானதொன்று. இவ்வாறான பேரணி நடாத்தப்படுகின்ற போது யார் நடத்துகின்றார்கள் இதன் நோக்கம் என்ன என்ன விடயத்திற்காக முன்னெடுக்கப்படுகின்றது முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் ஆராயந்த பின்னர் முஸ்லீம்களை கலந்து கொள்ள சொல்லிருக்க முடியும். ஆனால் இறுதியாக தங்களது கண்களை தங்களது கைகளால் குத்திக்கொண்டதாகவே நாம் பாரக்கின்றோம். அத்துடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லீம் கட்சிகளை பற்றி பொதுமக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். இது உண்மை.

இதற்கு காரணங்களை கூற முடியும். அதாவது யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி உடைக்கப்பட்டதற்கு எதிராக ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு முஸ்லீம் மக்களை கேட்டனர். ஆனால் மக்கள் ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் முஸ்லீம் மக்களை கலந்து கொள்ளுமாறு இவ்விரு கட்சிகளும் கோரி இருந்தன. ஆனால் இப்பேரணியில் குறித்த கட்சிகளின் தலைவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் தான் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள். இதன் மூலம் முஸ்லீம் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குகளை இழந்து வருகின்றன என்பது தான் உண்மையாகும். அதுமாத்திரமன்றி இவ்விரு கட்சிகளும் நேரான கொள்கைகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இதில் சிலர் அரசாங்கத்தில் இருந்து கொண்டும் ஏனையோர் அரசாங்கத்திற்கு வெளியிலும் இருக்கின்ற முரண்பாடான நிலைமையினை நாம் காண்கின்றோம்.

ஆகவே முஸ்லீம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர் என்பதை சமூகம் புரிந்து கொண்டுள்ளது. எங்களை பொறுத்தமட்டில் இந்த நாட்டில் முஸ்லீம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும். ஆனால் இந்த ஒற்றுமையை சிதைத்தவர்கள் தமிழ் பேரினவாத அரசியல்வாதிகளும் முஸ்லீம் பேரினவாதிகளும் தான் காரணம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அடிக்கடி தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லீம்கள் ஒன்றுபட வேண்டும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட வேண்டும் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினாலும் இதுவரை முஸ்லீம் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளார்களா?தீர்த்துள்ளார்களா? என்பதை பார்க்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பேரணிகளை நடாத்துகின்றனர். ஊர்வலங்களை நடத்துகின்றார்கள்.

மாநாடுகளை நடத்துகின்றார்கள். ஆனால் விடுதலை புலிகள் உட்பட கூட்டமைப்பில் உள்ள கட்சிகளால் அதாவது ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக இருந்த காலங்களில் இவர்களினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு என்ன நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. அதுமாத்திரமன்றி அவ்வாறு கடத்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களை அழைத்து ஏதாவது செய்துள்ளார்களா?அதுவும் இல்லை. வெறுமனே தங்களுக்கு இசைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறுவதும் தங்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனமாக இருப்பதனால் எவ்வாறு தமிழ் முஸ்லீம் உறவினை ஏற்படுத்த முடியும் என கேட்க விரும்புகின்றேன்.

எனவே தான் சகலருக்கும் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். இயக்கங்கள் மற்றும் விடுதலை புலிகளினால் கடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமாக செயற்படுகின்றது என்ற கருத்து வெளியாகும் என குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *