ஜனாசாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் எவரும் உரிமை கோர முடியாது. கடந்த காலங்களில் இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு அரசாங்கம் கேட்டிருந்ததுடன் திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை காணமுடியும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பு (11) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்,
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்தொன்றை முன்வைத்துள்ளார். அதாவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஜனாசாக்களை (மரண உடல்கள்) அடக்கம் செய்யவும் முடியும் என கூறியுள்ளார். இந்த கருத்தினை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பலரும் இதனை தீர்வாக பார்க்கின்றார்கள். அந்த வகையில் உலமா கட்சியினராகிய நாங்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பங்காளி கட்சியாக இருக்கின்ற வேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இக்கருத்து ஆறுதலையும் மன நிம்மதியையும் தருகின்றது. ஏனெனின் ஜனாசா எரிப்பினை முஸ்லீம் சமூகம் முற்றிலும் விரும்பாத செயலாக நாம் கண்டிருக்கின்றோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனாசா எரிப்பை தவிர்த்து நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் படி கேட்டு வருகின்றோம். இதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடமும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, பவித்ரா வன்னியராட்சி ஆகியோரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இதனை முழு முஸ்லீம் சமூகமும் எதிர்பார்த்திருந்தது. அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாசாக்களை அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்திருப்பது பாராட்டத்தக்க விடயம் . அத்துடன் இவ்விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பினை அரசு மேற்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாயவின் அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ அடிபணியாதவர்கள். அந்த வகையில் ஜனாசா விடயம் தொடர்பில் தாம் அழுத்தம் கொடுத்திருந்ததாக சிலர் வாதிட்டு கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தமது பேரணி மூலம் தான் நடைபெற்றதாக கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதி பல மாதங்களுக்கு முன்னர் ஜனாசாக்களை எரிக்காமல் அடக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
இது தவிர பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் நல்லடக்கத்திற்காக இடங்களை அடையாளப்படுத்தி தருமாறு கேட்டிருந்தார்கள். எனவே ஏலவே திட்டமிட்டபடி அரசாங்கம் ஜனாசாவினை அடக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்ததை காணமுடியும். ஆனால் இந்த விடயத்தை பிறகாரணிகள் தடுத்திருந்தமையினால் இவ்வாறு நீண்ட தூரம் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. எனவே உரிமை கோருவதை நிறுத்தி அரசாங்கத்தை பலப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.