கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு எடுத்து வரப்படவுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் புத்தளம் மக்கள் மேற் கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பாக புத்தளம் பெரிய பள்ளியினால் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு வருமாறு:
பீ.எம்.ஏ. ஜனாப் தலைவர் , பெரிய பள்ளி புத்தளம்
கொழும்பிலுள்ள குப்பை கூளங்களை புத்தளம் எழுவன்குளம் பகுதியிலுள்ள அருவக்காடு பகுதிக்கு எடுத்து வருவதற்கான திட்டம் மிக நீண்ட காலமாக இடம் பெற்று வருவதாக அறிகின்றோம்.
இவ்வாறு எடுத்து வரப்படவுள்ள குப்பை கூளங்களை தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை புத்தளம் பெரிய பள்ளியினால் செய்து வருகின்றோம். இது தொடர்பான கருத்துக்களையும் தெளிவுகளையும் சர்வமத தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் மற்றும் துறை சார்ந்தவர்களிடம் கலந்துரையாடிய போது புத்தளத்திற்கு எடுத்து வரப்படவுள்ள குப்பை கூளங்கள் தொடர்பாக எந்த ஒரு தரப்பாரும் தமது விருப்பத்தை தெரிவிக்காது தமது அதிருப்தியையே வெளிப்படுத்தினர்.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி பாராளுமன்றத்தில் உரை ஒன்றினையும் ஆற்றினார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு குப்பை தட்டப்பட உள்ள இடத்தினை பார்ப்பதற்குச் சென்ற அமைச்சர்களான ஜெயவிக்கிரம பெரேரா, நாவின்ன, வடமேல் மாகாண முதலமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் அனைவருமே குப்பை கொட்டுவதற்கு இந்த இடம் பொருத்தமற்றது என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை சுற்றாடல் தொடர்பான அறிக்கையில் தீர்க்கமான முடிவு ஒன்றும் கூறப்படவில்லை. எனினும் எந்த வகையிலாவது புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
1960 ஆம் ஆண்டு முதல் புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டதன் பின்பு அங்கிருந்து வெளியாகும் தூசுகள் மூலம் புத்தளம் மக்கள் பாதிக்கப்பட்டே வந்தனர்.
அதே போன்று நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் அமைக்கப்பட்ட போது பல்வகை எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அன்றிருந்த அரசு அவசரகால சட்டம் மற்றும் சர்வாதிகார ஆட்சி இருந்ததால் எந்த விதமான பொது மக்களின் எதிர்ப்பையும் கவனத்தில் எடுக்காத அன்றைய அரசு அனல் மின் நிலையத்தினை நிர்மாணித்து முடித்தார்கள்.
அதன் பாதிப்புக்களை புத்தளம் மற்றும் கல்பிட்டி மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் .
அதேவேளை குப்பை கூளங்களையும் இங்கு வந்து தட்டுவதனால் புத்தளம் மக்கள் தொடர்ந்து பாதிப்புக்களை எதிர் கொள்ளும் நிலை ஏற்படும். புத்தளம் கடலினை நம்பி வாழும் சுமார் 5000 மீனவக் குடும்பங்கள் உப்பு உற்பத்தியை நம்பி வாழும் சுமார் 4000 குடும்பங்கள் என்று 9000 குடும்பங்கள் பிரதானமாக பாதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் எந்த பாதிப்பும் வராது என்று கூறுகின்றனர்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்படும் போது இந்த பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் தருவோம் என்று கூறினர். 35 சதத்திற்கு ஒரு அலகு மின்சாரம் தருவதாகக் கூறி எம்மை ஏமாற்றினார்.
குடிநீரையும் இலவசமாக தர முடியும் என்றும் கூறினார்கள். ஆனால் எதுவுமே எமக்கு கிடைக்கவில்லை.
எனவே இந்த குப்பைகளை கொண்டு வரும் விடயத்தை நாம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் புத்தளம் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
தற்போது நல்லாட்சி அரசு இருப்பதால் ஜனாதிபதியும் பிரதமரும் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி எமக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவர் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். அதைவிடுத்து குளிரூட்டிய அறைகளில் அமர்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
புத்தளத்திற்கு 700 மெற்றிக் தொன் கூளங்களை எடுத்து வரவுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம். 20 அடி நீளமான கொள் கலன்கள் மூலம் 13 கொள் கலன்களில் இரு முறை ஒரு நாளைக்கு 26 கொள் கலன்கள் மூலம் இந்த கூளங்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொழுது வேறொரு கதையை கூறுகின்றார்கள். கொலன்னாவையிலுள்ள கூளங்களை எடுக்காது, நாளாந்தம் கொழும்பு, கண்டி, அனுராதபுரம் பகுதிகளில் சேகரிக்கப்படும் கூளங்களை இங்கு எடுத்து வரவுள்ளார்களாம்.
இந்த குப்பை கூளங்களால் ஆற்று நீர் பின்பு கடல் நீர் மாசடைந்து முழு கடலும் பாதிக்கப்படும். மீன், இறால், உப்பு உற்பத்திகள் யாவும் பாதிக்கப்படும்.
எமது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் எமக்கு யுத்தம் செய்து பழக்கமில்லை, அமைதி வழி மூலம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஐ.தே.கட்சி புத்தளம் மாவட்டத்தில் வெற்றி பெற புத்தளம் தொகுதி மக்களே பிரதான காரணம். எனவே தற்போதுள்ள அரசு புத்தளம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
மெளலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
தலைவர், ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் மாவட்டம்.
கடந்த அரசினால் திட்டங்கள் தீட்டப்பட்டு தற்போதைய அரசினால் இந்த விடயம் தொடரப்படுகின்றது. பத்திரிகை செய்திகளின் படி இன்னும் மூன்று மாதங்களில் புத்தளத்திற்கு அந்த கூளங்கள் எடுத்து வரப்படவுள்ளன.
மதத் தலைவர் என்ற அடிப்படையில் பொது மக்கள் பாதிக்கப்படும் எந்த விடயத்தையும் அனுமதிக்க முடியாது. சூழலியலாளர்கள், புத்தி ஜீவிகளின் அறிக்கையின் படியும் இந்த பிரதேச மக்களுக்கு மாத்திரம் அன்றி தூரப் பிரதேச மக்களுக்கும் இந்த குப்பைகள் பாதிப்பை ஏற்படுத்த இருக்கின்றது.
இந்த விபரீதத்திலிருந்து பொது மக்களை பாதுகாப்பது என்பது மதத் தலைவர் என்ற ரீதியில் கட்டாய கடைமையாக இருக்கின்றது. அதே போன்று அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மீதும் தார்மீக பொறுப்பாக உள்ளது.
எமது ஜனாதிபதி இயற்கை சூழலை நேசிக்கின்ற ஒருவர். அதற்கு ஆபத்து வருகின்ற போதெல்லாம் அவர் அமைச்சராக இருந்த போதெல்லாம் அதனை கண்டித்துள்ளார். எமது மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு எடுத்து வைக்கும் போது ஜனாதிபதி இதற்கு இடமளிக்கமாட்டார் என்பது எமது திடமான நம்பிக்கையாக உள்ளது.
நவீன தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு பாதிப்பு வராத முறையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது. எனினும் எமது நாட்டு கொந்தராத்துக்காரர்கள் தமது சுய இலாபங்களுக்காக செயல்படும் நிலை கடந்த காலங்களில் வளர்ச்சி அடைந்திருந்தது.
அதன் அடிப்படையில் இதற்கு எந்த அளவில் தொழில் நுட்பங்களைப் பாவித்து பொது மக்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது.
எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் புத்தளம் மக்கள் வேண்டிக் கொள்வது இந்த திட்டத்தை உடனடியாக முற்று முழுதாக நிறுத்துமாறும் வெளி மாவட்டங்களிலே சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த மாவட்டங்களிலேயே மக்களுக்கு பயனுள்ள அமைப்பில் அவற்றை பயன்படுத்த ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
முன்னைய கால அரசியல் சூழ்நிலை காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையம் போன்ற விடயங்கள் தொடர்பில் பொது மக்களின் குரல்கள் எடுபடாது இருந்திருக்கலாம். ஆனால் அந்த அரசியல் சூழ் நிலையை முற்று முழுதாக மாற்றுவதற்கு புத்தளம் தொகுதி மக்கள் காத்திரமான பங்களிப்பை செய்துள்ளனர். முன்னைய கால சூழ் நிலைகள் எல்லாம் மாற்றப்பட்டு தற்போதைய சூழ் நிலையில் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அரசோ, வேறு யாரோ இந்த விடயத்தினை செய்யாதிருந்தால் மதத் தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றைக் கூற முடியும். எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பொறுப்பு கொடுத்து அவனிடம் இதற்கான முடிவை பெற்றுத் தருமாறு வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
டாக்டர் ஐ.எம். இல்யாஸ்
புத்தளத்திற்கு எடுத்து வரப்படவுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் எமது இளைஞர்கள் மிகவும் துடிப்பாக உள்ளனர். புத்தளத்திற்கு சீமெந்து கூட்டுத்தாபனம், ஒயிஸ் ஒப் அமெரிக்கா, அனல் மின் நிலையம் வரும் போதெல்லாம் நாம் பல போராட்டங்களை செய்தோம். ஆனால் எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை.
எல்லா குப்பைகளையும் ஒன்று சேர்க்கும் இடமாக இன்று புத்தளம் மாறிவிட்டது.
மூன்று மாதத்திற்குள் குப்பைகளை எடுத்து வரவுள்ளதாக கூறுகின்றனர். இந்த மூன்று மாத இடை வெளிக்குள் வழக்கு தாக்கல் செய்வோம்.சாத்வீக ரீதியில் அமைதியான ரீதியில் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்களை செய்வோம். இதற்கெல்லாம் முடியாத நிலை ஏற்பட்டால் பலவந்தமான சில முறைகளையும் எடுக்க வேண்டி வரும். அதற்காக இளைஞர்கள் தயாராகுவர்.
எனவே இந்த அரசு அவ்வாறான நிகழ்வுகளுக்கு எம்மை கொண்டு செல்லாது என்று நம்புகின்றோம். இந்த நாட்டில் நல்லாட்சியை கொண்டு வருவதற்கு புத்தளம் மக்கள் முக்கிய பங்களிப்பு செய்தவர்கள். குப்பை என்பது ஒரு பெரிய பொக்கிஷம். உலகில் குப்பை இல்லாத நிலையில் அதனை வாங்குவதற்கு எல்லோரும் தயாராக உள்ளனர்.
அவ்வாறான நிலையில் ஏன் இந்த குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு வந்து திணிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
எனவே நாம் இதனை அமைதியான முறையில் எதிர்ப்போம் அல்லாது போனால் இளைஞர்களை திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு தயாராக உள்ளோம்.
ஏ.ஆர்.எம். அலி சப்ரி,
உறுப்பினர், பெரிய பள்ளி நிர்வாக சபை.
புத்தளத்திற்கு எடுத்து வரப்படவுள்ள குப்பை கூளங்கள் தொடர்பில் பெரிய பள்ளி, உலமா சபை, அரசியல்வாதிகள், பொது மக்கள் அனைவரும் இணைந்து இதனை கொண்டு வருவதை தடை செய்வதற்கு பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
1960 முதல் புத்தளம் சூழலை மாசுபடுத்தும் பல வழிகள் இடம் பெற்ற போது அதற்கு எதிராக புத்தளம் மக்கள் பல போராட்டங்களை செய்தும் தொடர்ந்தும் புத்தளம் மக்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டே வருகின்றது.
புத்தளத்தில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால்தான் இந்த அநியாயங்கள் நடக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த குப்பை கூளங்களை எடுத்து வரும் முயற்சி இடம் பெற்றால் அதற்கு எதிராக அமைதியாக போராடுவோம் என்று அரசுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
மக்கள் போராட்டதை உருவாக்கி புகையிரத பாதைக்கு குறுக்கே நின்று உயிர் தியாகம் செய்தாவது இந்த இந்த குப்பை கூளங்களை எடுத்து வருவதற்கு எதிராக இருப்போம்.