வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள்
இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு ஒன்றை தயாரிக்கவுள்ள நிலையில், வடமாகாண
மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் இடம்பெறும் வகையில் வட மாகாண சபையினால் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
தமிழ் மக்களின் வரலாற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள்
தயாரிக்கப்பட்டு கடந்த 22 ம் திகதி மாகாணசபையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தீர்வு திட்ட முன்மொழிவுகள் நேற்று முன்தினம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று மாலை யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் இணைந்து இந்த முன்மொழிவுகளை கையளிக்கவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை. சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனினால் குறித்த அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் நேற்று கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.