Breaking
Sat. Nov 23rd, 2024

சுஐப் எம்.காசிம்-

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடனின் நிர்வாகம் பயணிக்க உள்ள பாதை, ஆசிய நாடுகளின் இலட்சியங்களுக்கும் சென்று சேருமா? பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதியாக இருந்த இவருக்கு இப் போராட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னணிகள் தெரியாதிருக்காது. “promise land” என்ற தனது நூலில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில், தான் முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி ஒபாமா குறிப்பிடத் தவறவில்லை. சிரியா, எமென், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில், விடப்பட்ட இராஜதந்திரத் தவறுகளும் “promise land” இல் சிலேடையாகப் பேசப்பட்டுள்ளன.

அல்கைதா தலைவர், ஒஸாமா பின் லேடனைக் குறிவைத்த அபடோபாத் தாக்குதல் (2010), பாகிஸ்தானின் ஆள்புல எல்லைக்குள் அமெரிக்கா நடந்துகொண்ட அத்துமீறலாகவே விமர்சிக்கப்பட்டது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் 2001 இல் தாக்கப்பட்டது முதல், ஒஸாமா பின் லேடன் அபடோபாத்தில் 2010 இல் கொல்லப்படும் வரை, 6.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு செலவிடப்பட்டது. இந்தத் தொகைக்கான மனித உயிர்களின் இழப்பு எத்தனை தெரியுமா? எட்டு இலட்சத்து ஆயிரம் பேர். இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் மூன்று இலட்சம். இதற்காக ஏனைய ஐந்து இலட்சம் பேரும் அல்கைதா, தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளா? இல்லையா? என்பது, இன்றைய நவீன உலகின் போரியல் தர்மங்களும், அமெரிக்காவின் ஜனநாயகமும் தெரிந்துள்ளோர் புரிந்திருப்பர். இத்தனைக்கும் உயிரிழப்புக்கள்தான் இவை. அங்கவீனமானோர், சொத்துக்களின் இழப்பு வேறு. ஒருவேளை, போரென்று வந்தால் இவை தவிர்க்க முடியாதவை என்று இந்த “promise land” சொல்வது போலுள்ளது.

பொதுவாக இந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் தலைவிதியே இதுதான். அமெரிக்காவில் அமையும் அரசாங்கமே, சில நாடுகளின் அரசாங்கத்தையே தீர்மானிக்கிறதே. இதில் வியப்பு, இந்த நாடுகளிலுள்ள சிறுபான்மையினர், தமக்கு நியாயம் கோரி அமெரிக்கா தலைமையிலான அணிகளை நாடுவதுதான். ஆனால், இந்த உதவிகளை அமெரிக்காவோ? அல்லது மேற்குலகோ எதற்காகச் செய்கிறது என்பதைத்தான், சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் சில அரசுகள் புரியத் தவறுகின்றன. ஈரானில் கிளர்ச்சியாளர்களைத் தூண்டுவதற்கும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியாளர்களைக் கவிழ்ப்பதற்கும் உள்ள அமெரிக்காவின் வேறுபாடுகளை இவர்கள் புரிவது எப்போது?

இன்று எமது நாட்டின் விவகாரங்களையும் இந்தப் பாணியில் கையாள எடுக்கப்படும் சிறுபான்மை முயற்சிகள் பற்றித்தான் பல எதிர்பார்ப்புக்கள் பிறந்துள்ளன. இலங்கையின் பொறுப்புக் கூறல்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் பலப்படுத்த தமிழ் தரப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கை கொடுத்துள்ளன. இது தொடர்பில் ஐ.நா வரைந்து இலங்கைக்கு அனுப்பிய 16 பக்க அறிக்கையால் தமிழர் தரப்பு சுறுசுறுப்பாகச் செயற்படுகிறது. இது போதாததற்கு, கொவிட் 19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது குறித்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டிப்புக் கலந்த கவனத்தையும் குவித்துள்ளார். இவைகளே இன்று தமிழ், முஸ்லிம் அரசியலின் பேசுபொருளாகி வருகிறது.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் நகர்வுகளையும் நாம் நோக்க வேண்டி உள்ளதே. கனடாவில் ஆடம்பரக் கார்களில் புலிக் கொடிகளைத் தாங்கி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை, புலிகள் சார்பாளர்களின் சிந்தனையாகக் காட்டி நிராகரித்த இலங்கை அரசாங்கம், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை உலகளவில் நடத்திய அமெரிக்கா பயங்கரவாதத்தை உயிரூட்டலாமா? என மறு கேள்வி கேட்கிறது. ஏன், அந்த ஆர்ப்பாட்டத்தை புலிகளின் கொடியின்றி நடத்தியிருக்கலாமே! என்ற கருத்துக்களும் இருக்கிறது. புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில், இத்தகைய இன உணர்வுகள் எழும்புவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், புலிகளுக்காக பேசாமல் தமிழர்களுக்காகப் பேசும் அரசியல் தலைமைகள்தான், தமிழினத்தின் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவசியம். தாயகத்திலும் சரி, சர்வதேசத்திலும் இதுதான் தமிழினத்தின் நவீன நிலைப்பாடு.

கனடாவின் பிரம்டொன் மாநகர சபையில், ஈழப்போரின் இறுதிக் கட்ட நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட உள்ளது. “தாயகத்தில் தகர்த்தால், சர்வதேசத்தில் தலையெடுப்போம்” என்ற அச்சுறுத்தலாகவே அரசாங்கம் இதைப் பார்க்கப் போகிறது. இந்தப் பார்வைகள் ஜெனீவாவில் மற்றொரு ஜனநாயகச் சீறல்களுக்கு இரு தரப்பையும் தயார்படுத்தப் போகிறது. இந்தச் சீறல்களில், முஸ்லிம் தரப்பு எந்தக் காயை, எப்படி நகர்த்தும்? ஜனாஸாக்கள் தொடர்ந்தும் எரிக்கப்படாமலிருக்கும் அல்லது இதுபோன்ற பழிவாங்கல்கள் தொடராதிருக்கும் காய்களையே நகர்த்த வேண்டியுள்ளது. ‘”இதோ வருகிறது தீர்வு, இல்லை மறுகிழமை கொங்ரீட் பெட்டிகளில் அடக்குவதற்கு அனுமதி வரப்போகிறது” என அடிக்கடி வந்து நம்பிக்கையூட்டிய செய்திகளும் இப்போது அடியோடு நின்றுவிட்டன.

உள்நாட்டு முஸ்லிம் அரசியல் சக்திகள் களைத்து, இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை இஸ்லாமியர் உழைக்கும் காலமிது. ஐ.நா ஆணையாளரின் கடிதம் கருத்தில் கொண்ட விடயத்துக்கு, இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் சொல்லவுள்ள பதிலில்தான், இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் எழுதப்படவுள்ளது. உண்மையில் ஜனாஸா நல்லடக்கம், காதி நீதிமன்றம், முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டங்களில் அரசாங்கம் எடுத்துள்ள, எடுக்கவுள்ள அணுகு முறைகள் ஜெனீவாவில் எதிரொலிப்பது நிச்சயம்தான். இவ்விடயங்களில் அரசாங்கத்தை சங்கடப்படுத்தி, முஸ்லிம்களை ஆறுதல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவே தெரிகிறது.

இந்த ஆறுதல் எது வரைக்கும் என்பதுதான் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு உள்ள ஆதங்கம். ஒருவாறு ஜெனீவா நிலைமைகள் இலங்கை அரசாங்கத்தை இறுக்கினால், நல்லாட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் வழங்கிய கால அவகாசத்தை ராஜபக்ஷ அரசும் கோரலாம். அவ்வாறு கோரப்பட்டால் கொடுத்தேயாகும் ஒரு சூழல் ஏற்படத்தான் செய்யும். இதை வழங்காவிடின், தமிழர் தரப்பு என்றுமே தென்னிலங்கையின் பெரும் ஆதரவுள்ள அரசுக்கு எதிரான சக்திகளாகக் காட்டப்படுவது தவிர்க்க முடியாமல் போகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *