சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கப்பட்டுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும். பல வருடங்களாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாடு பிளவடைந்துவிடும் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் நீங்களும் அவ்வாறு நம்புகிறீர்கள். அந்த கூற்று உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. பத்திரிகை, புத்தகங்களை எடுத்து பாருங்கள். சமஷ்டிமுறை என்றால் என்னவென்பது உங்களுக்கு புரியும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியாவிலும் இந்த சமஷ்டி முறை நடைமுறையில் இருக்கின்றது. கனடாவிலும், சுவிட்ஸர்லாந்திலும் இந்த சமஷ்டி முறைமை நடைமுறையிலுள்ளது. சமஷ்டி முறையினூடாக ஒரு நாளும் நாடு பிரிவடைந்து செல்லாது என்றும் வடக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று அமைச்சர் பீ. ஹெரிஸனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வுத்திட்டம் தொடர்பான பிரேரணை நேற்று முன்தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்தோம். வடக்கு முதல்வர் என்ற வகையில் நானும், மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசாவும் இணைந்து இந்த பிரேரணையின் பிரதியை சபாநாயர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்தோம்.
எமது மக்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்னவென்பது அந்த பிரேரணைியல் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளன.
கேள்வி : இந்தப் பிரேரணையினூடாக இனவாதம் மீண்டும் தலைதூக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?
பதில் : அது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும். பல வருடங்களாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாட்டை பிளவுபடுத்திவிடும் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் நீங்கள் அவ்வாறு நம்புகறீர்கள். அந்த கூற்று உங்களுக்கு பழக்கமாகிவிட்டது. பத்திரிகை, புத்தகங்களை எடுத்து பாருங்கள் சமஷ்டிமுறை என்றால் என்னவென்பது உங்களுக்கு புரியும்.
இந்தியாவிலும் இந்த சமஷ்டி முறை நடைமுறையில் இருக்கின்றது. கனடாவிலும், சுவிஸ்லாந்திலும் இந்த சமஷ்டி முறைமை நடைமுறையிலுள்ளது. சமஷ்டி முறையினூடாக ஒரு நாளும் நாடு பிரிவடைந்து செல்லாது.
கேள்வி வேறு மாகாண சபைகள் சுயநிர்ணய உரிமையை கோரவில்லை. ஏன் நீங்கள் மட்டும் அதனை கோருகின்றீர்கள் ?
பதில் அனைத்து மாகாணங்களுக்கும் சுயநிர்ணய உரிமைகள் கிடைக்கும் வகையிலேயே இந்த பிரேரணையை நாங்கள் தயாரித்து நிறைவேற்றியுள்ளோம். தற்போது தேவையானால் மத்திய, மாகாண மக்கள் இதனை கோரினால் அவர்களும் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே எமது பிரேரணை அமைந்துள்ளது.
கேள்வி ஆனால் நீங்கள் தமிழ் மக்களுக்காகவே ஒரு மாநிலத்தை கோருகின்றீர்களே?
பதில் தமிழ் மக்களுக்காக அல்ல. இங்கு என்ன நடந்தது என்றால் 1956 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் தனி சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் தான் இந்த பிரச்சினை உருவானது. அதற்கு தற்போது தீர்வுகாண வேண்டும்.
அதற்கு தீர்வுகாண வேண்டுமானால் தமிழ் பேசும் மக்கள் தமது செயற்பாடுகளை தமது மொழியில் செய்து கொள்ளும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும். சிங்கள மக்கள் தமது பணியை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கேற்றவகையில் அரசியலமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.