கொரோனா வைரஸ் தொற்றை வியாபிக்காமல், மிகவும் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில், நியூஸிலாந்து முதலாவது இடத்தை வகிப்பதாக, ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 100 நாடுகள், அந்த நாடுகளின் உள்ளகச் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவுஸ்திரேலியாவின் லோவி நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சகல நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அந்தந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள், இந்த ஆய்வின் முக்கிய விடயமாக கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்தப் பட்டியலில் நியூஸிலாந்து முதலாவது இடத்திலும் வியட்நாம், தாய்வான், தாய்லாந்து, ஆகிய நாடுகள் முறையே 2ஆம் 3ஆம் 4ஆம் இடங்களையும் பெற்றுள்ளன.
இதேவேளை, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விடயத்தில் அவுஸ்திரேலியா எட்டாவது இடத்தையும் இலங்கை 10ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமெரிக்கா, 94ஆவது இடத்திலும் இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் 85, 86ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களை, சீனா பகிரங்கப்படுத்தாத காரணத்தால், சீனா இந்த ஆய்வில் உள்ளீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.