Breaking
Sat. Nov 23rd, 2024

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக வந்து பாருங்கள், அப்போதாவது எமது மக்கள் அனுபவிக்கும் வேதனை ஆட்சியாளர்களுக்கு விளங்கும். குறைந்தபட்சம் எம் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளவேனும் வன்னிப்பக்கம் அமைச்சர்கள் வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் அழைப்பு விடுத்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,


மன்னார் மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபை சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் மேலும் சில வேலைத்திட்டங்கள் அவசியம். மீனவர்களுக்கான சந்தை அவசியம். அதேபோல் தீயணைப்பு படைகள் மன்னாரில் இல்லை. இது குறித்தும் கவனம் எடுக்க வேண்டும். வடிகாலமைப்பு பிரச்சினைகளும் உள்ளது. அதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் கடலை அண்டிய பகுதிகள் என்பதால் மண்ணரிப்பு அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. கரையோர பகுதிகள் எமது மீனவர்கள் அதிகளவில் வாழ்கின்ற பகுதிகள் என்பதால் மண்ணரிப்பை தடுக்கும் நடவடிக்கை அவசியம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர அபிவிருத்தி அத்தியாவசியமானதொன்றாகும். வவுனியாவின் நகர அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்பதால் நகர அபிவிருத்திகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கிறோம்.
அதேபோல் கடந்த அரசாங்கம் ஓரளவு வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கடைசி நேரத்தில் திட்டமிடப்படாது கூடுதலான வீடுகளை எமது ஏழை மக்களுக்கு கொடுத்து அவர்களை கடனாளிகளாக மாறியுள்ளனர். எனவே அரசாங்கம் இதனை பொறுப்பேற்க வேண்டும். ஒரு திட்டமிடப்படாத விதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக எமது மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே அரசாங்கம் இதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இடைநடுவே நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார். எனவே அதனை நாம் வரவேற்கிறோம். எமது மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும், வீடுகளில் மலசல கூடங்கள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

எனவே இதனை கருத்தில் கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்க அமைச்சர்கள் எமது பகுதிக்கும் வரவேண்டும். அமைச்சர்களின் முகங்களை எமது மக்களுக்கு காட்ட வேண்டும். இதுவே அபிவிருத்திக்கும் ஏதுவாக அமையும். எமது மக்கள் மனங்களை வெற்றிகொள்ளவும் இதுவே சாத்தியப்படும். இந்த போரில் எமது சமூகம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நேரடியாக வந்து பாருங்கள் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *