Breaking
Sat. Nov 23rd, 2024

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு சம்பந்தமாக…

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட மக்களுக்கு சேவகம் செய்துகொண்டிருக்கும் நான், கொரோனா தொற்று காரணமாக மரணித்த உடலை எரிப்பதென்பது, இஸ்லாமிய நோக்கில் மரணித்த ஒருவருக்கு வழங்க வேண்டிய கெளரவத்தை சிதைக்கிறது என்ற, இலங்கையிலுள்ள தலைசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா பரவியுள்ளது. எனினும், அங்கெல்லாம் கொரோனா தொற்றினால் மரணித்த உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய பொது முடக்கத்தையும், ஏனைய சில வரைமுறைகளையும் விதித்துள்ள சூழலில், “இந்த நாட்டின் சுகாதார விடயங்களுக்கு மாத்திரம்தான் நீங்கள் கடமையானவர்கள். ஆனால், நான் முழுமொத்த தேசத்திலும் வாழும் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி. ஆகவே, நான் நாட்டின் எல்லா போக்குகளையும் சமாந்தரமாக கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பிளுள்ளவர். எனவே, நான் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுப்பேன்” என்று உங்களின் அதிகாரத்தை பிரயோகித்து, நாட்டை வழிநடாத்துவது மிக்க மகிழ்ச்சி.

ஆனால், கொரோனா நோயினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரத்தில், வைத்திய அதிகாரிகள் சங்கம் எரிக்கவே வேண்டும் என்று அடிப்படையற்ற விடாப்பிடியில் நிற்கின்ற இத்தருணத்தில், நீங்கள் உங்கள் மேலான அதிகாரத்தை பிரயோகித்து, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஜனாஸாக்களை புதைத்து நல்லடக்கம் செய்வதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிமேன்மை தங்கிய உங்களிடம் மிக வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

20 ஆவது திருத்தம் வெற்றிகொள்ளப்பட்டு, அதிகாரம் மிக்கவராய் உள்ள நீங்கள், உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனமானது கொரோனா தொற்று மூலம் மரணித்த ஒருவரின் உடலை அவரின் சமய நம்பிக்கைகள், சமூக அனுஷ்டானங்களுக்கு ஏற்ப இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளதற்கு இணங்க, கொரோனா தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவதன் மூலம், உங்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் கருணையும் அன்பும் நிலைபெறுவதோடு, இலங்கை முஸ்லிம்கள் தமது உரிமையை சுகித்து வாழ முடியுமானதாகவும் இருக்கும்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தயவுசெய்து கவனம் செலுத்தி, இலங்கை முஸ்லிம் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன்
பாராளுமன்ற உறுப்பினர்
திகாமடுல்ல மாவட்டம்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *