நாட்டின் பல பாகங்களில் கொவிட் -19 வைரஸ் தொற்றின் நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், வவுனியா சுகாதார திணைக்களத்துடன் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளையினர் இணைந்து ஒலிவாங்கி மூலம் விழிப்புணர்வு அறிவித்தல் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கு தேவையற்ற பயணத்தினை தவிர்ப்போம் , அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்லாது வீட்டில் இருப்பது சிறந்தது , பொருட்களை கொள்வனவு செய்யும் சமயத்தில் பைகளை வீட்டிலிருந்து கொண்டு செல்லுங்கள் , பணப்பரிமாற்றத்தின் போது அவதானமாக செயற்படுங்கள் , பொது இடங்களில் மேற்பரவலை தொடுவதை இயன்றளவு தவிருங்கள் போன்ற விழிப்புணர்வு அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
குறிப்பாக வவுனியா நகர் , பஜார் வீதி , மில் வீதி , தர்மலிங்கம் வீதி , புகையிரத நிலைய வீதி , ஹோரவப்போத்தானை வீதி போன்ற இடங்களில் இவ்விழிப்புணர்வு அறிவித்தல் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.