முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்ததாக கூறிய கருத்துக்களை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும் திரிபுபடுத்தப்பட்ட செய்தியே வெளியிடப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று (05) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்து நான் புகழாரம் சூட்டி பேசியதாக ஊடகம் ஒன்றின் திரிபுபடுத்தப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் குறித்த செய்தி பரவி வருகிறது.
இது உண்மைக்கு புறம்பான செய்து என்பதுடன் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படும் விதமாக அமைந்துள்ளது.
குறித்த சம்பவம் அண்மையில் வவுனியாவில் ஒரு அரச நிகழ்வில் நான் கலந்துகொண்ட போது ஆற்றிய உரையை மையமாக கொண்டே பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.
ரிஷாத் பதியுதீனுக்கு புகழாரம் சூட்ட வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை, முன்னர் வன்னியில் நாம் கடமையாற்றிய நேரத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக ரிஷாத் பதியுதீன் செயற்பட்டார் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே நான் கூறினேன்.
ஆனால் அந்த நிகழ்வில் திருமதி சார்ல்ஸ் குறித்து நான் அதிகமாக பேசினேன். அவர் எமக்காக பல தியாகங்களை செய்தார், எனக்கு அதிகளவில் உதவிகளையும் செய்துள்ளார். அவர் குறித்து நல்ல மரியாதையும், மதிப்பும் கொண்ட நபர் என்ற விதத்தில் அவர் குறித்து அதிகம் பேசினேன்.
இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளது, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க யாரும் நினைக்கவில்லை, எனது உரையை முழுமையாக ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஊடகங்களுக்கு இல்லை, அதனை நான் நன்கு அறிவேன். ஆனால் நான் கூறிய விடயங்களை திரிபுபடுத்தி என்னை நெருக்கடிக்குள் தள்ள நினைப்பது ஊடக தர்மமாக இருக்காது. அவ்வாறு நடந்துகொள்வது கீழ்த்தரமான செயற்பாடாக இருக்கும் என்ற நான் நினைக்கின்றேன். எனவே குறித்த ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க நான் எனது சட்ட ஆலோசகர்களிடம் பேசி வருகிறேன்.
விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.